மனதின் வெளிப்பாடு


Monday 17 October 2022

கனிவா ?கண்டிப்பா?

 

பெற்ற பிள்ளையை பேணி காப்பது மட்டுமல்ல பெற்றோர்களின் கடமை.

நேர்மைத் திறன் மிக்கவர்களாக சமூக அக்கறை கொண்டவர்களாக உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பு தான். கனிவைக் காட்டி வளர்ப்பதா? கண்டிப்பைக்  காட்டி வளர்ப்பதா? பெற்றோர்கள் முன்னுள்ள கேள்வி.

கனிவு என்பது அன்பானது.கண்டிப்பு என்பது மருந்து போன்றது.மருந்தே உணவானாலும் ஆபத்து . மருந்து இல்லை என்றாலும் ஆபத்து.அளவோடு புகட்டி,ஆனந்தம் பெற்று இளம் தலைமுறையினரை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச் செல்லுதல் பெற்றோரின் பொறுப்பு.

எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழும் வழியை தன் பிள்ளைகளுக்கு கற்றுத் தரும் பெற்றோர்கள், அளவற்ற செல்வங்களை சேர்த்து வைத்து செல்லும் பெற்றோர்களை விட அதிகம் மேலானவர்கள்.

இளைஞர்களின் வாழ்க்கையில் இரண்டு வகை காயங்கள் ஏற்படுகிறது.

ஒன்று உடல் காயம். மற்றொன்று மனக்காயம். உடல் காயத்திற்கு மருந்து தடவலாம். மனக்காயம் எதனால்? அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், உறவுகளின் புறக்கணிப்பு, தனிமை போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

மனக் காயம் அவர்களின் செயல் திறனைப் பாதித்து வளர்ச்சியைத் தடுக்கும். சூழ் நிலையை உணர்த்தி கட்டுப்பாடோடு வளர்க்கப் படும் குழந்தைகள் மனக் காயத்தைத் தவிர்த்து எதையும் தாங்கும் இதயம் பெறுகிறார்கள்.

கண்டிப்பும் அரவணைப்பும் எல்லை மீறாமல் பயன்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு. பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் மேற்கொள்ளக்கூடிய கூடுதல் கவனம் பிள்ளைகளை நேர் வழியில் திசை திருப்புகிறது என்பது உண்மை.


No comments:

Post a Comment