மனதின் வெளிப்பாடு


Monday 16 December 2019

மத நல்லிணக்கம்



மத நல்லிணக்கம்
மேடையில் மட்டுமல்ல
மேன்மை பெற்றவர்களின்
மனங்களில் நுழைவதால்
மகிழ்ச்சி பெறுகிறது.

Friday 13 December 2019

பக்கங்கள் எங்கே?


வாழ்க்கைப் புத்தகத்தின்
இருபக்க அட்டைகளாய்
நானும் அவளும்
இணைபிரியாமல்
ஒட்டிக் கொண்டிருக்கிறோம்..

ஆசையாய் எழுதி
அன்பாய் பிரசுரித்த
எங்கள் புத்தகத்தின்
பக்கங்கள் இன்றி...

எப்போதாவது மட்டும்
தெரிகின்றன
எங்கள் கண்களுக்கு
நாங்கள் எழுதிய பக்கங்கள்..

கண்களின் தடுமாற்றமா?
இல்லை வாழ்வியல் மாற்றம்.

அட்டையோடு ஒட்ட
ஆசைப் பட்டன பக்கங்கள்
அன்று...
பக்கங்களோடு ஒட்ட
ஆசைப்படுகின்றன அட்டைகள்
இன்று...

பக்கங்கள் இல்லாத அட்டைகள்
உபயோகமற்றதாய்
ஆகிவிடுகின்றது
எடைக்கு கூட
எடுப்பதில்லை எவரும்...

ஒரு பக்கம் எழுதினாலும்
பக்கம் பக்கமாய் எழுதினாலும்
கழன்று விடுகின்றன
பக்கங்கள்..

சாந்தமாய் எழுதினாலும்
சாட்டை கொண்டு எழுதினாலும்
அட்டையோடு ஒட்ட
சங்கடப் படவே செய்கின்றன
பக்கங்கள்..

அன்றாட தேடலில்
அவரவர் குடும்பமே சுமையாக..
யாரும் தூக்கிச் சுமக்க
நினைப்பதில்லை அட்டைகளை..

பால் ஊட்டினேன்
சீராட்டினேன்
மார்பில் புதைத்தேன்
பேசிப் பயனில்லை

பக்கங்கள் வாதிடுகின்றன
எல்லாம் கடமை என்று...

உன்னிடம் இருப்பதென்ன?
உன்னால் ஆவதென்ன?
பணியின்போது கேட்டார்கள்
பணி செய்ய..
பிணியின்போது அவர்கள்
பார்வை பறைசாற்றுகிறது
அந்தக் கேள்விகளை...

முதுமைக் காலத்தில்
உடலும் ஒத்துழைப்பதில்லை
உறவும் ஒத்துழைப்பதில்லை
பணம் இல்லாவிட்டால்
வாழ்வே பெரும் தொல்லை..

எங்களைப்போன்ற நட்புகள்
துணையோடு
அவளுக்கு நானும்
எனக்கு அவளும்
புத்தகத்தின் அட்டைகளாய்
கடைசிவரை
வாழ்ந்து விட்டுப் போகிறோம்...

தனித்துவிடப்பட்டு
தவித்து நிற்கும் பலரை விட
நாம் மேல் என்ற சமாதானத்துடன்






Wednesday 11 December 2019

மனம் கவர்ந்த கவிஞன்


ஒத்த கருத்தோடு
ஒட்டி வாழ்வது
சமூகத்தில் எளிது.

மாற்றுக் கருத்தை
உற்ற கருத்தாய்
உருமாற்ற நினைப்பது
அவனியில் என்றும் பெரிது.

உற்ற கருத்தை
துணிந்து ஒலித்தவன் நீ...
மக்கள் நலம் வாழும்
மாற்றுக் கருத்தை
அவனியில் விதைத்தவன் நீ...

மண்ணில் மறைந்து
ஆண்டுகள் பல ஆனாலும்
அப்பா என்றதும்
பலசமயம்
நினைவில் வருகிறது உன் பா
ரதிஅழகின் உச்சம்
பாரதி பாட்டின் உச்சம்..

ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை பூமியில்
சமதர்மத்தை காட்டினாய்
இழிவு கொண்ட மனிதர்
இந்தியாவில் இல்லை என்று
சாதி மத பேதத்தை வெறுத்தாய்..

உயிர்கள் அனைத்தும் ஒன்று
உலகிற்கு உவமை காட்டினாய்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற
உயர்ஜாதி கவிஞன் நீ
பிறப்பால் அல்ல பாட்டால்....

சுடர்மிகும் அறிவுடன்
சிவசக்தியை கூப்பிட்டு
உன் நலம் கேட்கவில்லை
ஊராரின் நலம் வேண்டுமென்றாய்..

வறுமையை உனது ஆக்கினாய்
பாட்டை இனிமையாக்கினாய் விடுதலை எழுச்சியை உருவாக்கினாய்
மக்கள் வீறுகொண்டு எழச்செய்தாய்

நேர்கொண்ட பார்வை உமது
சிந்தனைத் தடுமாற்றங்களோ எமது
உதற மாட்டோம் உன் நினைவை
நெஞ்சில் நிறைந்த கவிஞனே..

பலமான பாலம்

வீரம் வெளஞ்ச மண்ணு
எங்க மண்ணு
உள்ளம் பறிகொடுக்க
ஏத்த மண்ணு
சொன்ன வார்த்தையில் பத்தாது
வாழ்ந்தால் நெஞ்ச விட்டு போகாது

வைகையிலே
கால் வைக்கையிலே
மனம் துள்ளும்
நெஞ்சை அள்ளும்..

அழகர் வந்திடுவார் குதிரையிலே
கூட்டம் எல்லாம் கூடிடுமே மதுரையிலே
சொக்கர் மீனாட்சி கல்யாணம்
பார்த்து ரசித்திருக்கு பலகாலம்
மதுரை வைகை ஏவி பாலம்
நின்று சிறக்கட்டும் ஆயுள்காலம்.


அந்த ஒரு நொடிக்காக



இதயம் நின்ற நொடிகளில
இது உதவும்
இதயம் மீண்டும் துடிக்க...

எது உதவும்?
இதயம் துடிதுடிக்கச்
செய்பவளின்
நினைவில் சிறக்க..

நொடி போதும்
அவள்
மூளையில் மின்சாரம் பாய்ச்ச

அந்த ஒரு நொடி
காத்துக் கிடக்கின்றது
வருடக்கணக்காக...
ஒருதலைக் காதலாய்..

Tuesday 10 December 2019

நீ இன்றி வாழ?


ஓயாத இருமலால்
அவதியுறுகிறேன்
நெடுநாட்களாக....

கற்பூரத்தை
கனலில் காட்டி
மார்பில் தேய்த்தால்
சளி குறையுமாம்
வழி சொன்னார்கள்...

மனதில் பதிந்த
என்னவள்
சூடு தாங்காமல்
தவிப்பாளென்ற
வலி புரியாமல்.....

தூதுவளை சாப்பிட்டால்
மிக நல்லதாம்
சொன்னார்கள்
எனக்கான தூது
அவள்தான் என்று
அறிந்துகொள்ளாமல்....

வெற்றிலைச்சாறு நல்லதாம்
குடிக்கச் சொன்னார்கள்

வெற்றிலை தட்டு ஏந்தி
அவள் இல்லம் சென்று
நிச்சயிக்க மறுத்துவிட்டு...

ஓமம் நல்லதாம்
சொன்னார்கள்
ஹோமம் வளர்த்து
அவள் கரம்பற்றி
என்னிடம் ஒப்படைக்க
மனமின்றி...

மருத்துவரை நாடினார்கள்
மருந்தை
தவறாமல் தந்தார்கள்.

அவளை
மணமுடித்து தர
மனமின்றி...

மருந்தை
உண்டு செரித்தால் தானே
பலனளிக்கும்
மென்று துப்பினால்?

வலி குறைய வழியின்றி
சளி குறைய வாய்ப்பில்லை
எப்படி புரிய வைப்பேன்?

சளி முற்றினால்
காசம் வருமாம்
சொன்னார்கள்...

சுவாசம்
புறம்தள்ளி
மண்ணில் வாசம்
எப்படி சாத்தியம்?
என் சுவாசமே
அவள்தான் என்று
அறியாமல் பேசுகிறார்கள்...

நான் இருமுவது கண்டு
பொருமுகிறார்கள்
அவளை வெறுத்து...

ஓயாது இருமுகிறேன்
ஒவ்வொரு முறை
இருமும் போதும்
அவள் பெயரை உச்சரிக்கிறேன்..

என் உயிரில் கலந்த
அவள் பெயரை
உச்சரிப்பதால்
அடிக்கடி
தொடர்ந்து இருமுகிறேன்
என்னையும் மீறி....

Sunday 8 December 2019

இல்லம் தேடி வருகிறோம்


உன்னிடம் இருப்பதெல்லாம்
உனக்குச் சொந்தமில்லை

இறைவனின் ஆணையை
ஏற்று நடக்கிறோம்
சிறந்த எடுத்துக்காட்டாய்
 தினந்தோறும்...

பல மேடு பள்ளங்களை
அன்றாடம் கடக்கிறோம்..

மேடு பள்ளங்களை
உள்ளடக்கியதுதான் வாழ்க்கையென 
அன்றாடம் உணர்த்துகிறோம்...

கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
தொடர்ந்து பயணிக்கிறோம்
உழைப்பின் உயர்வை உணர்கிறோம்...

எங்கள் சிக்னல் எப்போது வரும்?
காத்திருக்கிறோம் நாங்கள்

சிக்னலுக்காக காத்திருந்து
பல சிக்னல்களை கடந்து
பயணிக்கிறது வாழ்க்கை....

எங்களுக்கு அடையாளம் உண்டு
 எங்களின் அடையாளத்தை
 பலர் உபயோகப்படுத்துகிறார்கள்....

உங்களுக்கான தேடல்கள்
 எங்களுடையது ஆகும்போது 
எங்களுக்கு மகிழ்ச்சி....

எங்களிடம் இருப்பதை 
இல்லாதவர்களுக்கு கொடுக்க 
எங்களால் முடியாது...

அவரவர்களுக்கு உரியதை
அவரவர் இடம் 
ஒப்படைத்து மகிழ்கிறோம்....

வாகனமும் அலைபேசியும்
எங்கள் வழித்துணைு மட்டுமல்ல
 வாழ்க்கை துணை..

அலைபேசி பயன்பாட்டில்
 நாங்கள் முக்கிய அங்கம்.

அலைபேசியில் ஆரம்பித்து 
அதனாலேயே தொடர்கிறது
எங்கள் பயணம்.

நிகழ்காலத்தின் நிஜத்தை
 புரிந்து கொண்டு
நாங்கள் பெற்ற
பட்டம் மறந்து பயணிக்கிறோம்
எங்களுக்கான தேவைகளை
பூர்த்தி செய்ய...

எங்களுக்கான தேடல்கள்
உங்களுக்கான தேவைகள்
மட்டுமல்ல..

ஆயிரம் கனவுகளோடு
அன்றாடம் பயணிக்கிறோம்
உங்களுக்கான உணவுகளை 
சுமந்துகொண்டு...
எங்கள் எதிர்காலம் சிறக்குமென்ற  நம்பிக்கையில்..?


























பயணம்



விரைவான
வளர்ச்சியை நோக்கி
 நகரும் பயணம்
 நாள்தோறும் நடக்கிறது
நகரங்களில்.

கடல்


அகம் நிறைந்த அளவில்லா  அதிசயம்
யுகம் நிறைந்த கடல்.

ஆனந்தம் தரும் கடற்கரை  என்றும்
மிகுந்திடும் சிறப்பு காதலர்க்கு.

இயற்கையை கண்டு ரசிக்க யாவரின்
மனம் விரும்புவது கடல்.

ஈக்கள் மொய்க்காது அழகூட்டும் கடல்
உருவாக்க உலபுவர் பொறுப்பு.

உப்புதரும் கடல்நீர் உப்பை  அளவோடு
உபயோகித்தால் மிக நன்று.

ஊறுநேராது உலகு இயற்கை சீற்றம்
கடலில் புகுந்து கலக்கும்வரை.

எது கண்டும் அஞ்சாத கடலும் சிலநேரம்
 உள்வாங்குவது பாரினில் வியப்பு.

ஏனென்று புரியாத புதிர் கடலுள்ளும்
 கடலை அறிபவர் தமக்கு.

ஐந்தில் கற்ற நீச்சல் ஐம்பதிலும் பலன்
கடலினுள் உழைப்பவர் தமக்கு.

ஒன்றைப் பற்றி சிந்தித்து ரசிப்பதற்கு சிறப்பாய் எதிர்நிற்கும் கடல்.

ஓயாத கடல்அலையால் மனம் துள்ளும்
கண்ணால் காண்பவர் தமக்கு.

ஔ என்பது உயிரெழுத்து மீனவருக்கு கடலே என்றும் உயிர் மூச்சு.

Saturday 7 December 2019

கடலும் பெண்ணும்


ஓ.. கடலே
நீ பரந்து விரிந்த பலசாலி
ஆழிப்பேரலையால்- நீ
ஆட்டம் போட்டால்
ஆடிப்போகும் உலகம்

இருந்தாலும்
உன்னுள் புதைந்த வளங்கள் எடுக்க
உன் ஆழம் அறிந்து செயல்பட
எங்களால் முடியும்.

ஆனால்
பெண்ணின் மனதின்
ஆழம் அறிய
முயன்று கொண்டிருக்கிறோம்
 பல நூற்றாண்டுகளாய்...

சென்றவர்களும் வந்தவர்களும் தேடித்தேடி களைப்படைந்து சொல்கிறார்கள்...

கடலைவிட பெண்ணே பலசாலி- அவள்
மனதின் ஆழம் காண முடியாததால்!



நவீன யுகம்



அழுகிறது குழந்தை தொட்டிலில்
அழுகை நிறுத்த
ஓடிவந்தாள் தாய்...

ஆராரோ ஆரிராரோ
தாலாட்டு பாட்டு சத்தம்...

தாய் படவில்லை
அலைபேசியில் ஒலிக்கிறது
குழந்தை சிரிக்கிறது.

நவீன யுகத்தில்
தாய்ப்பால் மட்டுமல்ல
 தாலாட்டும் வற்றிவிட்டது...

Thursday 5 December 2019

அன்பு


அன்பை விதைத்து அன்பை பெருக்கும்
அன்பே உயர் பண்பு.

ஆனந்தம் தரும் உள்ளன்பு அதனன்றி
 அ௧ிலம் சிறக்காது நன்று.

இயல்பானஅன்பு பண்பானால் அது
தருமே உலகில் சமாதானம்.

ஈசனாய் தெரிகிறான் அன்பால் ௭ன்றும்
மனதை தொட்டவர் மனங்களிலே.

உண்மை பேசி ஊருக்கு உழைத்தால்
உலகம் வசப்படும் அன்பாலே.

ஊற்று நீர்  வற்றும் வற்றாதே என்றும்
அள்ளஅள்ளக் குறையா அன்பு.

எண்ணம் யாவும் அன்பு மிகுந்தால்
ஏழைக்கு இரங்குதல் எளிதாகும்.

 ஏமாற்றம் இன்றி உலகம் செழிக்கும்
எதிர்பார்ப்பு அற்ற அன்பாலே.

ஐயம் வேண்டாம் அன்பிற்கு அதைப்
பெற்றவர் பெறுவர் தவிப்பு.

ஒலிக்கும் குரலில் அன்பு நிறைந்தால்
உலகம் மகிழுந்து வரவேற்கும்.

ஓயாது கடலலை ஓய்ந்தால் கடலில்லை
ஓயாத அன்பிற்கு எல்லையில்லை.

ஔவையின் அன்பே ஆத்திசூடி அறம்
 சிறக்க உலவுவோம்அன்புசூடி.

Tuesday 3 December 2019

தியானம் செய்வோம்




மதம் சார்ந்ததல்ல தியானம்
மகத்துவம் வாய்ந்தது தியானம்
அனுதினமும் செய்வோம் தியானம்
அன்பாய் அரவணைக்கும் தியானம்

கண் மூடி அமர்வது தியானம்
 மனதை குவிப்பது தியானம்
  மகிழ்ச்சி நிறைப்பது தியானம்
 ஆற்றல் கொடுப்பதே தியானம்

முகத்தின் பொலிவை கூட்டும்
பேச்சின் தொனியை மாற்றும்
தெளிவான செயலாற்றல் உருவாக்கும்
புருவ மத்தியில் மெய்சிலிர்க்கும்

 வாழ்ந்தார்கள் முன்னோர்கள் இறந்தகாலம்
 வாழ்வார்கள் சந்ததிகள்  எதிர்காலம்
 வாழ்கின்ற வாழ்க்கையே நிகழ்காலம்  வாழ்க்கையில்  கூடட்டும் தியான காலம்.

 முன்னோர்களை நினைத்து சில திதிகள்
சந்ததியை நினைத்தே பல கவலைகள்
நிதியை நிறைத்தால் நிம்மதி கிட்டுமா?
அவர் விதி மாற்ற நம்மால் முடியுமா?

இல்லத்தின் மகிழ்ச்சிக்கு இனியதைச் செய்கிறோம்
 உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு உரியதை செய்வோமா?
அவரவர் செய்யும் பாவபுண்ணியம்
 மறுமை வாழ்வில்  வருவது நிச்சயம்

 ஆடி ஓடுகையில் விஞ்ஞானம்
 ஆட்டம் ஒடுங்குகையில் மெய்ஞானம்
 இதுவா நமது  உயர் ஞானம்?
 இளமையில் திறக்கணும் மெய்ஞானம்

 புகழிடம் பணியும் மனது
 புகலிடம் தேடி அலையும்
 புக இடமற்ற ஒருநாள்
 படைத்தவன் புகழிடம் பணியும்.

மண் வளத்தால் மகசூல் பெருகும்
மன வளத்தால் மரியாதை பெருகும்
மனவளம் தியானத்தால் பெருகும்
தியானம் பெருக அகிலம் சீர்படும்.

    

Monday 2 December 2019

படைப்பின் நோக்கம்


படைப்பின் நோக்கம் படைத்தவன் அறிவான்
பாழும் நெஞ்சே கலங்காதே
உந்தன் கவலை மாற்றும் சக்தி
அவனிடம் உண்டு மறவாதே

உன்னால் முடியும் உந்தன் பணியை
அனுதினம் செய்ய மறவாதே
தானாய் எப்படி மாறும் என்று
வீணாய் கவலை கொள்ளாதே

உன்னை காட்டிலும் கீழே உள்ளோர்
உலகில் மக்கள் பலர் ஆவார்
அவர் நலம் பற்றி  அ௧்௧றை கொண்டால்
உன் நலம் பற்ற பலர் வருவார்

 பற்றற்று இருக்கப் பழகி விட்டால்
 பற்றும் முதல் கரம் படைத்தவனே
 திக்கற்று திரியும் மனம் தன்னை
 திசை திருப்புவதும் அவன்தானே

படைத்தவன் நினைவு பெருகி விட்டால்
பழம் கஞ்சியும் அமிர்தமாகும்
மனதில் பெருகும் ஆசை எல்லாம்
தானாய் மறைந்து சரியாகும்.

  இல்லறம் துறவு எதுவானாலும்
 இயல்பாய் இருத்தல் அவசியமே
 மதில் மேல் பூனை ஆகாமல்
 மனதில் மகிழ்ச்சி அவசியமே

 பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
 பிறந்தவர் இறவாமல் இருந்ததில்லை
 உணர்ந்தால் வாழ்வில் ஏது தொல்லை
 உணர்ந்தவர் செயலால் அழிவதில்லை

 மதம் மனிதனுக்கு வழிகாட்டும்
 மனிதம் மனிதனை வாழ்விக்கும்
 மனம் முழுவதும் மனிதம் நிறையட்டும்
 படைப்பின் நோக்கம் செயலில் தொடரட்டும்.!

Sunday 1 December 2019

தரக் குழுவின் மேன்மை



ஒவ்வொரு மனிதருமே சொல்லுவதே தரம் என்றால் பொருளோட உயிர் தானே
ஒவ்வொரு பொருட்களுமே சொல்லுவதே தரம் போனால் தங்காது சந்தையிலே
குழுவாய் இணைதல் வேண்டும் நம் தொழிலில்
குறைகள் எளிதாய் தீரும் வெகுவிரைவில்

தரமே ஓ தரமே நீ கூடி விடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகிவிடு

குழுவாய் கூடி விவாதிப்போம்
குறைகள் பற்றி யோசிப்போம்
நம் தொழிலின் வளர்ச்சி பற்றி நாள் முழுதும் சிந்திப்போம்

எந்தத் தொழிலில் குறையில்லை
எந்த செயலில் தடையில்லை
தடைகள் போக்கும் பணிகள் எல்லாம்
திறனைக் கூட்டும் வழிமுறைகள்

குறை நீக்கும் குழுக்கள் எல்லாம்
நிறுவனத்தில் உயர்வாகும்
குழுவில் அங்கம் நீயும் என்றால்
உன்னை வாழ்த்திப் புகழ்பாடும்

யாருக்கில்லை சிந்தனைகள்?
ஆக்கபூர்வ சிந்தனைகள்
குழு சிந்தனையில் வரும் துளிகள் எல்லாம்
பெரும் உயர்வுக்கு வழிகாட்டும்
நம் குறை உணர்ந்தால்
அதை தினம் முயன்றால்
தீர்வும் வெளியாகும்

தரமே ஓ தரமே நீ கூடிவிடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகிவிடு

கற்ற பாடம் பலவாகும்
பெற்ற தீர்வு சிலவாகும்
முயன்று நாமும் உழைத்தால் தானே
சிந்தையெல்லாம் செயலாகும்

வளரும் நாடு நாமென்ற
தாழ்வு இன்னும் நமக்கு எதற்கு?
முடியும் என்று போராடு
உயர்ந்த தரக்குழுவோடு

வெற்றி என்ற இலக்கு எல்லாம்
அனைவருக்கும் பொதுவாகும்
நாம் பெற்றிடுவோம் என நினைப்பதெல்லாம்
அவரவர் வாழ்வின் இயல்பாகும்

திறமை இருக்கு உன்னோடு
உயர்ந்த தரக்குழுவோடு
நம் கரம் இணைந்தால்
அது தரம் கொணர்ந்தால்
தொடர் வெற்றியும் எளிதாகும்

தரமே ஓ தரமே நீ கூடி விடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகி விடு.

ஏழ்மை



வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

சந்தோசமா வாழ்ந்திட தான் அனைவருக்கும் இஷ்டம்தான்
ஏழை செய்யும் தொழிலில் எல்லாம் வந்திடுதே நஷ்டம்தான்

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

பணக்காரன் வச்சதுதான் சட்டங்க
பொருளை பதுக்கி வைச்சு வித்தாக்க குத்தங்க
உழவு செய்யும் விவசாயிக்கு நஷ்டங்க
வாங்கி விற்கும்  தரகருக்கு லாபங்க.

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

ரோட்டோரம் குவித்து விக்கும்  வெங்காயம்
பார்த்துகிட்டே நடந்திருப்போம் தினம்தோறும்
பதுங்கி இருச்சு ஊருக்குள்ள பக்குவமா
விலை கேட்டா தலை சுத்தும் நிச்சயமா

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

கடன் வாங்கி வாங்கிபுட்டா வாகனம்
கடன் கட்டிடத் தான் தினந்தோறும் சாகணும்
ஏழைக்கு கூடாதுங்க ஆசை
ஏக்கப் பெருமூச்சே அவனுக்கான ஓசை

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

பொதுத்துறை தான் தனியாரா மாறுது - அதில் பணிபுரிந்தோர் உள்ளமெல்லாம் வாடுது
 வேலையில ஏதுமில்ல நிரந்தரம்
கலங்குறானே தொழிலாளி தினம் தினம்

பொருளாதார வீழ்ச்சி ன்னு சொல்றாங்க
மாற்றம் வரும் நம்புங்க ன்னு சொல்றாங்க
ஏமாறும் ஏழைய பாருங்க - அவன் அடிப்படைத் தேவையை உணருங்க.

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்