மனதின் வெளிப்பாடு


Monday 24 October 2022

இல்லம் தேடி வருகிறோம்


எங்களிடம் இருப்பதெல்லாம்

எங்களுக்கு சொந்தம் இல்லை

ஆணையை ஏற்று நடக்கிறோம்

சிறந்த எடுத்துக்காட்டாய்

தினந்தோறும்... 


எங்களிடம் இருப்பதை

இல்லாதவர்களுக்கு கொடுக்க

எங்களால் முடியாது

அவரவர்களுக்கு உரியதை

அவரவர்களிடம்

ஒப்படைத்து மகிழ்கிறோம்... 


வாகனமும், அலைபேசியும்

எங்கள் வழித்துணை மட்டுமல்ல

வாழ்க்கைத் துணை.... 


அலைபேசி பயன்பாட்டில்

நாங்கள் முக்கிய அங்கம்

அலைபேசியில் ஆரம்பித்து

அதனாலேயே தொடர்கிறது

எங்கள் பயணம்.... 


எங்களுக்கென்று அடையாளம் உண்டு

௭ங்களின் அடையாளத்தை வைத்து

எங்களை உபயோகப்படுத்துகிறார்கள்... 


உங்களுக்கான தேடல்கள்

எங்களுடையது ஆகும்போது

எங்களுக்கு மகிழ்ச்சி.... 


எங்கள் சிக்னல் எப்போது வரும்?

காத்திருக்கிறோம் நாங்கள்

சிக்னலுக்காக காத்திருந்து

பல சிக்னல்களை கடந்து

பயணிக்கிறோம் நாங்கள்.... 


பல மேடு பள்ளங்களை

அன்றாடம் கடக்கிறோம்

வாழ்க்கை சீரானது அல்ல

சிக்கல்கள் நிறைந்தது

மேடு பள்ளங்களை உள்ளடக்கியது

உணர்கிறோம் நாங்கள்.... 


கொட்டும் மழையிலும்

சுட்டெரிக்கும் வெயிலிலும்

தொடர்ந்து பயணிக்கிறோம்

உழைப்பின் உயர்வை உணருகிறோம்.... 


நிகழ்காலத்தின்

நிஜத்தை புரிந்து கொண்டு

நாங்கள் பெற்ற

பட்டம் மறந்து பயணிக்கிறோம்

எங்களுக்கான தேவைகளை

பூர்த்தி செய்ய...


உங்களுக்கான தேவைகள் மட்டுமல்ல

எங்களுக்கான தேடல்கள்...


ஆயிரம் கனவுகளோடு

அன்றாடம் பயணிக்கிறோம்

அட்சய பாத்திரமான

எங்கள் பைகளில்

உங்களுக்கான உணவுகளைச்

சுமந்துகொண்டு...

உங்கள் இல்லம் தேடி வருகிறோம்.




Thursday 20 October 2022

நீ சாதிக்க பிறந்தவன்


புதிய உத்வேகத்தோடு புறப்படு

புதுமைகள் செய்யும் நோக்கோடு

விதைக்கிற விதை தான் முளைக்கும்

வீரியமும் கவனமும்

காரியத்தின் அனுகூலங்கள்


எண்ணி எண்ணி

ஆனந்திப்பது சுலபம்

எது வந்தாலும் 

சாதிப்பது கடினம்


கற்பனைக்கோட்டை

எல்லையின்றி விரியும்

காணிநிலம் நிஜம் என்றால்

அடையும் கடினம் புரியும்


நிழல்களின் அடையாளத்தில்

நிஜங்களை தொலைக்காதே

வீணான கற்பனையில்

காலத்தை நகர்த்தாதே


மணமில்லா மலர்

மணம் பரப்புமா?

திறன் இல்லாத தொழில்

மனம் கவருமா?


உளியின் கூர்மை

பாறையைப் பிளக்கும்

உள்ளத்தின் கூர்மை

வெற்றியைக் குவிக்கும்


பத்தோடு பதினொன்றாய்

வாழ்ந்தது போதும்

பதிவுகள் உன்னால் என்று

வாழ்த்தட்டும் தேசம்


சரியான பார்வை

சரியான தீர்வு

முறையான வாழ்வே

முன்னேற்றத்தின் சுவடு


உன்னை அறி முதலில்

உயரும் வழி எதிரில்

மாற்றம் தானே நிரந்தரம்

தோல்வி எப்படி தினம் வரும்?


உன்னுள் மனமாற்றம்

உயர்வுக்கு வழிகாட்டும்

தடுமாற்றம் தோல்வி தகரும்

நீ முயன்றால் எதுவும் முடியும்.


Wednesday 19 October 2022

ஆன்லைன் விளையாட்டும் சூதாட்டமும்


ஆபத்தை விளைவிக்கும் அனேக விஷயங்களில்

ஆன்லைன் சூதாட்டமும் ஆபத்தானது

ஆசைகாட்டி அடிமைப்படுத்துகிறது

அடிமைப்படுத்தி உயிரைப் பறிக்கிறது.


இளைய சமுதாயத்தின்

கற்கும் திறனை குறைக்கிறது

கவனச் சிதைவுக்கு காரணமாகிறது

கண்களில் குறைபாடு உண்டாகிறது

உடல்நலனில் சேதாரம் விளைவிக்கிறது

மனநலம் பரிதவித்து நிற்கிறது

படைப்பாற்றல் பாழ்பட்டுப் போகிறது

கோபமோ உச்சியைத் தொடுகிறது

கண்ணியம் காற்றில் பறக்கிறது

கவலையின்றி கண்டபடி சுற்ற வைக்கிறது

ஆசை கொண்ட மனிதனின்

பொருளாதாரத்தை சுரண்டுகிறது

சமூக ஒழுக்கத்தைப் பாழ்படுத்துகிறது

தற்கொலைக்கு தூண்டுகிறது 

குடும்பத்தை சீரழிக்கிறது.


ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க

அவ்வப்போது குரல் ஒலித்தாலும் 

ஒழிப்பதற்கான மசோதா சட்டசபையில் நேற்று

மகிழ்ச்சியுடன் அரங்கேறியது

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் கட்டுப்பாட்டில் புதிதாய் இயங்கப் போகிறது

சூதாட்டம் தவிர்த்த ஆன்லைன் விளையாட்டுகளை ஆணையம்

ஒழுங்குபடுத்த போகிறது

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு

தண்டனை கடுமையாக்கப் பட்டுள்ளது

நல்ல செய்தி தான், மகிழ்ச்சிதான் 


மனதின் ஆழத்தில் ஒரு குரல்

'குடி' என்னும் அரக்கனை ஒழிக்க

அரசு எப்போது முன் வரப்போகிறது?

நிதிநிலை காரணமாய் இருக்கலாம் என்றாலும்

படிப்படியாய் 'குடி'யை குறைப்பதற்கு

முயற்சிகள் செய்யலாமே...?

  

பொருளாதார வளர்ச்சி


பொருளாதார வளர்ச்சி
தனிநபர் வருமானத்தின் எழுச்சி
பசிப்பிணி முற்றும் நீங்கி
செழிப்பதுதானே
உண்மை சுதந்திர எழுச்சி.

மக்கள்தொகையின் அழுத்தம்
அறிவுத்திறனில் மேம்பட்டால்
இயற்கை வளம் இனிதானால்
அச்சம் தவிர்த்திடலாம்
உயர்வாய் வாழ்ந்திடலாம்.

உழவு தொழில் செய்வோன்
மிகுதியான உணவு பெறுவான்
கடந்த கால நினைவுகள்
காற்றில் கரைந்து விட்டது
நிகழ்காலக் காட்சிகள்
புரிதலுக்கு சாட்சிகள்.

மண்ணின் மகத்துவமும்
புத்தாக்கத்தின் புரிதல்களும்
மண்ணில் மிகுந்தால்
மகத்துவம் கிட்டும்
பொருளாதாரம் சிறக்கும்

வாழ்க்கை தரம் உயர
வளர்ச்சி அவசியம்
அனுதினம் தொடரணும்
அனைவரும் பெறனும்.

நல்ல கல்வியும்
ஆரோக்கியமான வாழ்க்கையும்
சத்துள்ள உணவும்
வறுமையற்ற நிலையும்
ஏற்றத் தாழ்வின் வீழ்ச்சியும்
சமவாய்ப்பு நிலையும்
அனைவரின் எதிர்பார்ப்பு
பெற்றால் பெறுவோம் பூரிப்பு.

பொருளாதாரம் சிறப்பது
நாட்டை மட்டும் சார்ந்ததல்ல
நல்லுள்ளம் படைத்த
அனைவரையும் சார்ந்தது.

கற்றவர் அறிவு
கல்லாதவர் உழைப்பை
சுரண்டினால்
ஏற்றத்தாழ்வு நீங்காது
பொருளாதாரம் சிறக்காது

கல்வி என்பது பட்டம் மட்டுமல்ல
வாழ்வின் புரிதல்கள்
புரிந்தவர்களின் பட்டம்
பறக்கிறது வானில்
புரிய முயற்சிப்பவர்களின்
வழிமறித்து...

ஏற்றுமதி நிறைந்து
இறக்குமதி குறைந்தால்
நாட்டின் பொருளாதாரம் சிறக்கும்.

புரிய முயற்சிப்பவர்களின்
புரிதல்கள் மிகுந்து
தடையைத் தகர்த்து
ஏற்றுமதி பெருகட்டும்
பொருளாதாரம் சிறக்கட்டும்.


Monday 17 October 2022

பெருமாளும் மாலும்



பெருமாளிடம் பக்தர்கள் கூட்டம்
மாலிடம் வாடிக்கையாளர் கூட்டம்

பெருமாளிடம் பக்தி சுரக்கிறது
மாலிடம் மகிழ்ச்சி பிறக்கிறது

பெருமாளிடம் கோரிக்கை வரம்
மாலிடம் கேளிக்கை வியாபாரம்

மனம் பேசுகிறது பெருமாளிடம்
பணம் பேசுகிறது மாலிடம்

தரிசிப்பவர் கும்பிடுவது பெருமாள்
தரிசிப்பவரை கும்பிடுகிறது மால்

நிறைய ஸ்தலங்கள் பெருமாளிடம்
நிறைய தளங்கள் மாலிடம்

கருட வாகனம் பெருமாளுக்கு
கரண்ட் வாகனம் மாலுக்கு

மனபாரம் இறங்குது பெருமாளிடம்
பொருள் பாரம் ஏறுது மாலிடம்

நடைசாற்றல் உண்டு பெருமாளிடம்
கடைசாற்றல் உண்டு மாலிடம்

லட்டு பிரசித்தம் பெருமாளிடம்
துட்டு பிரசித்தம் மாலிடம்

முடி கொடுக்கிறார்கள் பெருமாளிடம்
முடி திருத்துகிறார்கள் மாலிடம்

காணிக்கை குவிகிறதுபெருமாளிடம்
காண்பவை விரிகிறது மாலிடம்

ஜிஎஸ்டி விதிப்பதில்லை பெருமாள்
ஜிஎஸ்டி இழப்பதில்லை மால்

அருள் தேடுவது பெருமாளிடம்
பொருள் தேடுவது மாலிடம்

அண்ணாச்சி புலம்பல் பெருமாளிடம்
அனைவரும் குவியுராரே மாலிடம்

இறைவனுக்கு நன்றி

 



அறுபதைத் தொட்டு ஓராண்டு ஆயிடுச்சு எனக்கு

அவனைத் தொட ஆண்டுகள் எத்தனை இருக்கு?

ஆயுள்காலம் நாமாய் நீட்டிட வாய்ப்பில்லை

ஆண்டவன் கட்டளை மாற்றம் செய்திட அனுமதியில்லை


மண்ணில் பிறந்தால் மரணம் நிச்சயம்

விண்ணில் தொடரும் செய்த புண்ணியம்

இம்மையில் நன்மையை நிறைவாய் செய்தால்

மறுமையில் செழுமையை உயர்வாய் பெறலாம்.


இறையச்சம் என்னுள் இருப்பது பூரிப்பு

இறைவழிபாட்டில் முழுமை பெறவில்லை தவிப்பு

பணி ஓய்வு பெறும் வரை வாழ்க்கை அலுவலகத்தில்

பணி ஓய்வு பெற்ற பின் வாழ்க்கை ஆனந்தத்தில்.


சராசரியாய் இருப்பதிலும் இருக்கின்றன சங்கடங்கள்

சரிக்கட்டி சமாளிக்க ஏதும் இல்லை பின்புலங்கள்

இருப்பதைக் கொண்டு இயல்பாய் வாழ்ந்துவிட்டேன்

இறைவனுக்கு நன்றி சொல்லி பூரிப்பை பெற்று  விட்டேன்.

கனிவா ?கண்டிப்பா?

 

பெற்ற பிள்ளையை பேணி காப்பது மட்டுமல்ல பெற்றோர்களின் கடமை.

நேர்மைத் திறன் மிக்கவர்களாக சமூக அக்கறை கொண்டவர்களாக உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பு தான். கனிவைக் காட்டி வளர்ப்பதா? கண்டிப்பைக்  காட்டி வளர்ப்பதா? பெற்றோர்கள் முன்னுள்ள கேள்வி.

கனிவு என்பது அன்பானது.கண்டிப்பு என்பது மருந்து போன்றது.மருந்தே உணவானாலும் ஆபத்து . மருந்து இல்லை என்றாலும் ஆபத்து.அளவோடு புகட்டி,ஆனந்தம் பெற்று இளம் தலைமுறையினரை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச் செல்லுதல் பெற்றோரின் பொறுப்பு.

எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழும் வழியை தன் பிள்ளைகளுக்கு கற்றுத் தரும் பெற்றோர்கள், அளவற்ற செல்வங்களை சேர்த்து வைத்து செல்லும் பெற்றோர்களை விட அதிகம் மேலானவர்கள்.

இளைஞர்களின் வாழ்க்கையில் இரண்டு வகை காயங்கள் ஏற்படுகிறது.

ஒன்று உடல் காயம். மற்றொன்று மனக்காயம். உடல் காயத்திற்கு மருந்து தடவலாம். மனக்காயம் எதனால்? அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், உறவுகளின் புறக்கணிப்பு, தனிமை போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

மனக் காயம் அவர்களின் செயல் திறனைப் பாதித்து வளர்ச்சியைத் தடுக்கும். சூழ் நிலையை உணர்த்தி கட்டுப்பாடோடு வளர்க்கப் படும் குழந்தைகள் மனக் காயத்தைத் தவிர்த்து எதையும் தாங்கும் இதயம் பெறுகிறார்கள்.

கண்டிப்பும் அரவணைப்பும் எல்லை மீறாமல் பயன்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு. பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் மேற்கொள்ளக்கூடிய கூடுதல் கவனம் பிள்ளைகளை நேர் வழியில் திசை திருப்புகிறது என்பது உண்மை.


வைகுந்தம்-கைலாயம்


படித்து ரசித்தது

குருவிடம் சீடன் கேட்டான் வைகுந்தம் எங்கே இருக்கிறது ?கைலாயம் எங்கே இருக்கிறது?

குரு சொன்னார் வைகுந்தம் கூப்பிடு தூரத்தில் இருக்கிறது. கைலாயம் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.

கஜேந்திரன் என்ற யானையின் காலை முதலை பற்றிக்கொண்டது. ஆதிமூலமே என்று விஷ்ணுவை நினைத்து கூப்பிட்டது யானை.உடனே விஷ்ணு ஓடி வந்து காப்பாற்றினார். அதனால் வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் உள்ளது.

பாசக் கயிறு கொண்டு மார்க்கண்டேயனை கட்டி இழுத்தும் ௭மனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.ஏனென்றால் கைக்கெட்டிய தூரத்தில் இருந்த சிவலிங்கத்தை மார்க்கண்டேயன் பற்றி கொண்டு இருந்தான். எனவே கைலாயம் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.

எண்ணம் சரிதானே


காற்றடைத்த பையால் உருவானேன்
காற்றடைத்து நான்..
எனக்கென்று விதித்த வரையறையில்..

காயம்பட்டு
கசிய ஆரம்பித்தால்
கருகிவிடும் என் வாழ்க்கை..

ஓட்டையற்று இருக்கும் வரை
ஓட்டை உள்ள மனிதர்கள்
விரும்புகிறார்கள் என்னை...

உயிர்க்காற்றை நிறைத்து
உதைக்கிறார்கள் என்னை
உருண்டோடுகின்றேன் நான்..

இங்குமங்குமாய்
அலைக்கழிக்கிறார்கள்
சில நேரம் மெதுவாக
சிலநேரம் ஆக்ரோசமாக...

மாறிமாறி உதைத்தாலும்
வலி தாங்கும் இடிதாங்கியாக
பழகிவிட்டது என் வாழ்க்கை...

வழிமறித்து நிற்பவரின்
உட்புகுந்து செல்ல
உதைக்கிறார்கள்...

நிற்பவரின் கைகளில்
தஞ்சம் புகுந்தால்
மார்போடு அணைக்கிறார்
ஆறுதலாய் என்னை...

அவரைத் தாண்டி
உள்ளே புகுந்தால்
விண்ணைப் பிளக்கிறது
கரகோஷம்..

எனக்கான வேஷம்
தஞ்சம் புகுவதா?
கரகோஷம் பெறுவதா?
புரியாமல் உருள்கிறேன்
எனக்கான ஆசை ஏதுமின்றி?

முழு பந்தாய் உருவாக்கி
கால் பந்து என பெயரிட்டு
காலால் உதைப்பவர்களே...

எனக்குள்ளே எண்ணுகிறேன்
ஒருமுறை என்னுள்ளே
நான்பெற்ற சுவாசத்துக்காக
இவ்வளவு உதைபடுகிறேனே
ஒவ்வொரு நொடியும்
காற்றை சுவாசித்து வாழ்கிற
காற்றடைத்த பையாகிய நீங்கள்
௭வ்வளவு உதைபடுவீர்கள் கடவுளிடம்..
எண்ணம் சரிதானே?


Sunday 16 October 2022

பாகுபலியும் பொன்னியின் செல்வனும்

 


பாகுபலியும் பிரம்மாண்டம்.

பொன்னியின் செல்வனும் பிரம்மாண்டம்

வியக்க வைக்கும் காட்சிகள்

பாகுபலியிலும் உண்டு.

வியக்க வைக்கும் காட்சிகள்

பொன்னியின் செல்வனிலும் உண்டு.


நவீன தொழில்நுட்ப காட்சிகள்

பார்ப்போரை பரவசப்படுத்துகிறது

ஆச்சரியம் ஊட்டுகிறது இரண்டிலும்.


பாகுபலியின் கதைக்களம் வேறு.

பொன்னியின் செல்வனின் கதை வரலாறு.

வரலாற்றை சுற்றியே வட்டமிட்டார் 

பொன்னியின் செல்வன்.

இயக்குனரின் இயக்கம் பாகுபலி

வரலாற்றின் இயக்கம் பொன்னியின் செல்வன்

கதையை எண்ணியபடி செதுக்க முடியும்

வரலாற்றை எண்ணியபடி செதுக்க முடியாது

உள்ளப்படி சொல்வது கதை

உள்ளபடி சொல்வது வரலாறு


கதையிலும் காட்சியமைப்பிலும்

கட்டுப்பாடற்ற தன்மையால்

தொழில்நுட்ப உதவியோடு

ஜொலித்தார் பாகுபலி


கதையிலும் காட்சியமைப்பிலும்

வரலாற்று உண்மையை மட்டும்

உரக்கச் சொல்வதால் ஜெயித்தார்

பொன்னியின் செல்வன்.


உள்நாட்டு தயாரிப்பில் உச்சம் தொடுவோம்

 

இந்தியாவில் தயாரிப்போம்

உலகத்துக்காக உருவாக்குவோம்

உயரிய லட்சியத்தோடு

விமானப்படையின் வளர்ச்சிக்காக

மேம்பட்ட வசதிகளோடு

உள்நாட்டில் உருவாக்கப்பட்டது

ஐ.என்.எஸ் விக்ராந்த் எனும்

விமானம் தாங்கி கப்பல்.


இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டு

இன்னும் கூடுதல் திறனோடு

ராணுவத்தின் பலமாக

இந்தியாவின் பெருமையாக

உள்நாட்டு தயாரிப்பாக

களமிறங்கி இருக்கிறது

'பிரசாந்த்' எனும் ஹெலிகாப்டர்

மனதார வாழ்த்துவோம்.

இறக்குமதி குறைந்து

ஏற்றுமதி நிறைந்து

ஏற்றம் பெற்று வாழ்வோம்.


சிக்கல்கள் சீர்படட்டும்

 காதல் உணர்வு இயற்கையானது

காதல் தொந்தரவு கசப்பானது

பரங்கிமலை சம்பவம் படு மோசமானது


இரக்கமற்ற காதல்

இறப்புக்கும் காரணமாகின்றது


அவ்வப்போது

அரங்கேறத் தான் செய்கிறது

இதுபோன்ற சம்பவங்கள்.


பறிகொடுத்த பெற்றோர்கள் தவிப்பார்கள்

பழி வாங்கியவரின் பெற்றோர்களும் துடிப்பார்கள்

சமூகத்தில் அவர்கள் எப்படி

தலைநிமிர்ந்து நடப்பார்கள்?

ஒழுக்கமற்ற பிள்ளையென

ஊரார்கள் ஏசும்போது

கூனிக்குறுகி நிற்பார்கள்.


திசை மாறாமல்

வாரிசை வழி நடத்துவதில்

பெற்றோரின் பங்களிப்பு

மிக மிக அவசியம்.


நேசித்தவர் நேசிக்க மறுத்தால்

உயிரைப் பறிப்பது கொடுமை

தொடரக்கூடாது இந்த நிலைமை

சட்டத்தை கடுமையாக்கி

சமூக அவலத்தை போக்கி

சீர்படுத்துவோம் சிக்கல்களை.




Saturday 15 October 2022

கவியரசு கண்ணதாசன் சொன்னது

 

_ ஒழுங்காக சம்பாதித்து பணக்காரன் ஆனவனும் குறைவு .உண்மையைப்

பேசி பதவிக்கு வந்தவனும்  குறைவு.

_ தந்தி அடிக்கிற ஊருக்கு போய் சேரும் வதந்தி பேசுகிறவனிடமே திரும்பி வரும்.

_ கேட்கும்போது சிரிப்பு வர வேண்டும்.சிந்தித்துப் பார்த்தால் அழுகை வர வேண்டும் அதுதான் நல்ல நகைச்சுவை.

_ உலகத்தில் உள்ள எல்லோருமே யோக்கியர்கள் தான் .எப்போது?தூங்கும் போது.

_ கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது.

தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.

மெய்நிகர் உண்மை(Virtual Reality)

 

உண்மையற்ற இல்லாத ஒன்று

இருப்பது போல் காட்சியளிக்கிறது

பார்க்க முடிகின்றது

உணர முடிகின்றது

உண்மை அல்ல எனும் உணர்வோடு

கணினியில்

மெய்நிகர் உண்மையாக... 

இதயமும் இணையமும்

 

இதயத்தின் செயல்பாட்டால்

உடலியக்கம்

இணையத்தின் செயல்பாட்டால்

உலகின் இயக்கம்

இதயம் வேலை செய்வது

மனிதனின் வாழ்வுக்கு

இணையம் வேலை செய்வது

மனிதனின் தேவைக்கு

இதயம் உடலின் மையப்புள்ளி

இணையம் உலகின் மையப்புள்ளி

தொழில்நுட்ப முன்னேற்றத்தின்

மையப்புள்ளி இணையம்

ஆற்றும் சேவையோ மிக மிக அதிகம்

ஒன்றன்பின் ஒன்றாய் வருது

ஒளிமயமான எதிர்காலம் தருது

2ஜி என்றோம்

3ஜி என்றோம் 

4ஜி என்றோம்

5ஜியை வரவழைக்கிறோம்

செயற்கை நுண்ணறிவின்(Artificial Intelligence) 

உச்சியை எட்ட

உபயோகமா இருக்கப்போவது 5ஜி

செயற்கை அறிவாற்றலால்

விவசாயம், தொழில்நுட்பம்

மருத்துவம், பொறியியல்

அனைத்துத் துறையிலும்

அபரிமிதமான வளர்ச்சி பெறலாம்.

செயற்கை நுண்ணறிவு

தவறுகளை குறைக்கும்

துல்லியத்தை கூட்டும்

மீண்டும் மீண்டும் செய்ய

சலிக்கும் வேலையை

சலிக்காது செய்யும்

இணையத்தின் வேகம் கூட கூட

கதிர்வீச்சுக்களும்

அலைவரிசைகளும்

உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும்

அச்சுறுத்தல் என்றாலும்

இதயத்தைப் புறந்தள்ளியும்

இணையத்தைப் புறந்தள்ளியும்

மனிதனால் வாழ முடியாது

இணையத்தின் ஈர்ப்பு விசையில் இருந்து

மனிதனால் விடுபட முடியாது.

Sunday 9 October 2022

யோசிப்போம்

 ஒரு பிரச்சனையை எப்போதுமே நாம் நம்முடைய கோணத்தில் பார்க்கிறோம்.அது அப்படித்தான் என்று முடிவு எடுக்கிறோம்.அப்படி இல்லாமல் அந்த பிரச்சனையை பிரச்சனைக்கு உரியவர்கள் என்று நினைக்கிறோமோ அவர்களின் கோணத்தில் இருந்தும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

அப்போதுதான் பிரச்சினையின் உண்மையான தன்மை நமக்கு புரியும்.அப்படி யோசித்தால் பிரச்சனைகள் எளிதாக தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மற்றவர்களுடைய கோணத்திலிருந்தும் நாம் யோசித்து பார்க்கின்ற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

படித்ததும் ரசித்ததும்

 


தோல்வியே நீ எங்கே பிறக்கிறாய்?

வெற்றி அடைய வேண்டும் என்ற உறுதி எங்கு தளர்கிறதோ அங்கு நான் பிறக்கிறேன்.


தன்னைப் பற்றி தவறாக பேசிய ஒருவனிடம் ஒரு மனிதன் கூறினார்.

நீ கூறியது உண்மையாக இருப்பின் இறைவன் என்னை மன்னிக்கட்டும்.

நீ கூறியது தவறாக இருப்பின் இறைவன் உன்னை மன்னிக்கட்டும்.


நன்மையை செய்கிறவன் கோவிலின் வெளி வாசல்படி வரை வருகிறான்.

அன்போடு நெருங்கி வருபவன் ஆலயத்தின் உள்ளே புகுந்து விடுகிறான்.


மானம் பெரிது உயிரல்ல. 

மக்கள் பெரியவர் மதமல்ல

எவருக்கும் நாம் அடிமையல்ல

எவரும் நமக்கு அடிமை அல்ல

இதுவே நமக்கு கீதை.


நாட்டுப்பற்று என்பது கொடியேற்று விழாக்களில் இல்லை. தங்கள் உழைப்பை நாட்டுக்கு கொடுப்பதில் தான் உள்ளது.


மனிதர்களுக்கு எந்த பொருளின் மதிப்பும் அது இல்லாத போது தான் தெரியும்.


பெண்ணின் இரண்டு சொட்டு கண்ணீர் நூறு சொற்களை விட வலியது.


மனிதன் வெற்றியில் கற்பது சொற்பம் .தோல்வியில் கற்பது அதிகம்.

Thursday 6 October 2022

ஆசை விலக்கு

 விழித்திருக்க கிடைத்த இரவுகளில்

உரசிச் செல்கிறது

கடந்தகால கசப்புகள்

நிகழ்காலத்தின் நிஜங்கள்

எதிர்காலத்தின் ஏக்கங்கள்


புரண்டு புரண்டு படுத்தாலும்

முரண்டு பிடிக்கிறது தூக்கம்


மூலையில் கிடந்ததெல்லாம்

மூளையில் மின்சாரம் பாய்ச்சுகிறது


வருவது வரட்டும் என்று

மனதுக்குள் எண்ணினாலும்

வந்து கொண்டே இருக்கிறது

எனது நினைவுகள்..


முதுமை நெருங்க நெருங்க

விழித்திருக்கும் இரவுகளும்

விரிந்து கொண்டே செல்கிறது..

விழித்திருக்க கிடைக்கும் இரவுக்காக

இளமை அலைபாய்கிறது

முதுமை அசை போடுகிறது..


நான் என்ற அகம்பாவம் ஆணவம்

இவையாவும்

இருளின் மொழியாகி

இதயத்தில் ஆட்சி செய்யும்

எல்லாம் மாயை என்று உணரும் காலம்

உறுப்புகள் செயல் இழந்து

உடல் தளரும் காலம்

கண்மூடி மண்ணுக்குள்

நாம் செல்லும் காலம்...

விளக்கின் ஒளியினால் புற இருள் மறையும்

ஆசை விலக்கினால் அக இருள் மறையும்..




நிலா

 நிலவின் அழகை

தவழும் குழந்தையாய்

கண்டு ரசித்தவர்கள்

வாழ்ந்தும் மறைந்தும்

வருவதும் போவதுமாய்

உலகம் உணர்கையில்

நிலா மட்டும்

தவழும் குழந்தையாய்

அழகு காட்டுகிறது

தொன்று தொட்டு

அன்றும்..இன்றும்..என்றும்


தடுமாற்றம் ஏன்?

 காயங்களுக்கான மருந்தாக

கவலை எப்படி இருக்க முடியும்?

எதுவும் நிரந்தரமில்லை

மாறாதது எதுவுமில்லை

என்கின்ற எண்ணமே

காயங்களுக்கான களிம்பு

தடவினால் மறையும் தழும்பு...


தடுக்கி விழும்போது

தாங்கிப் பிடிக்காதவர்கள்

வீறுநடை போடும் போது

விமர்சிக்க தகுதியற்றவர்கள்...


செதுக்கிய சிற்பியும்

வலி தாங்கிய கற்களும்

கண்ணுக்கு தெரிவதில்லை

சிற்பத்தில்...


ஏற்றிய படிக்கட்டுகளும்

பட்ட அவமானங்களும்

கண்ணுக்கு தெரிவதில்லை

வெற்றியில்...


தன்னம்பிக்கை இல்லாதவன்

தனக்குத் தானே

தாழிட்டுக் கொள்கிறான்

பிறரை வெறுப்பவன்

பிறரால் தாழிடப்படுகிறான்


பிறப்புக்கும் இறப்புக்குமான

இடைவெளியை

இறைவன் நிர்ணயிக்கிறான்

இடைவெளியை நிரப்ப

மனிதன்

பல வழியைத் தேடுகிறான்...


இதுவும் கடந்து போகும்

மனம் எண்ணினால்

அதுவே வாழ்க்கையாகும்

அழகாய் வாழ்வு மாறும்...



கால்கள்

 

நடக்கப் பழகும் முன்

ஓடத் துவங்குகின்றன கால்கள்

இளமையில்...


ஓடிப் பழகிய பின்

ஓய்வெடுக்க முடியாமல்

ஓடிக்கொண்டே இருக்கின்றன கால்கள்

வாலிபத்தில்...


ஓடிய கால்களை நடக்க வைக்க

தேவைப்படுகிறது

மூன்றாவது கால்கள்

முதுமையில்...


மூச்சு நின்ற பின்

உயிரற்ற உடலை

தூக்கிச் சேர்ப்பது

பிறரின் கால்கள்...