மனதின் வெளிப்பாடு


Friday 21 June 2013

இனிப்பான விருந்தாளி

இனிப்பான விருந்தாளி 



இனிப்பான  விருந்தாளி 
இன்முகம் காட்டுகின்றார் 
சம்மதமின்றி  சந்தித்து 
காரியத்தை  ஆற்றுகின்றார் .


சாதி மத பேதமின்றி  
சங்கடத்தை ஊட்டுகின்றார் 
பாரபட்சம் ஏதுமின்றி 
பாடாய்ப் படுத்துகின்றார் 

இன்சுலின் சுரப்பில் 
மந்தம் என்கின்றார் 
தாய் தந்தை உறவின் 
பந்தம்  என்கின்றார் 

உழைப்பற்ற உணவின்
சொந்தம் என்கின்றார் 
உருக்குலையும் நிலை கண்டு 
உச்சம் என்கின்றார் 

உறுப்பைப் பாதிக்கும் 
பொறுப்பைச் செய்கின்றார் 
உயர்ந்தும் குறைந்தும் 
உணர்ச்சி சிதைக்கின்றார் 

தளர்ச்சி ஊட்டி 
வளர்ச்சி தடுக்கின்றார் 
மலர்ச்சி போக்கி 
மயங்க வைக்கின்றார் 

சிந்திக்கும் மனிதன் 
சந்திக்கும் தடையிதனை 
சிந்தித்து வென்றிடலாம் 
சிறப்பாக வாழ்ந்திடலாம் 

சிறிது நேர நடைபயிற்சி 
சீரான உடற்பயிற்சி 
சீராக்கும் உடல்தன்னை 
மருந்தின்  துணையுடனே.