மனதின் வெளிப்பாடு


Sunday 13 October 2013

செலவினக் குறைப்பு

கவிதை பாட நேரமில்லை எனக்கு
இட்ட பணி செலவினங்கள் குறைப்பு
கருத்தினிலே வழிகள் பல இருக்கு
இயன்ற வரை கூறுகின்றேன் தொகுத்து.

கூடு விட்டு கூடு பாயும் வித்தையல்ல
கூடி நின்றால் செலவினங்கள் குறையும் மெல்ல
சிக்கனத்தை எக்கணமும் நினைத்திருப்போம்
சிந்தையிலே என்றுமதைத் தாங்கி நிற்போம்.

உள்ள படி உருவாகும் செலவினங்கள்
உள்ளப்படி தேவைதானா யோசிப்போம்
தேவையற்ற செலவினங்கள் நாம் குறைப்போம்
ஊழல் அற்று உயர்வாகச் சிந்திப்போம்

இழப்புக்கள் ஏராளம் கண்ணெதிரில்
இணைந்தே வருகின்றது கண்ணெதிரில்
இசைந்தே வாழ்வது இழிவாகும்
இணைந்து வெல்வது சிறப்பாகும்

தரம் காக்கும் செலவினங்கள் உயர்வாகும்
அதனாலே உயர்ந்த தரம் உருவாகும்
அதிலெந்த மாறுதலும் செய்ய வேண்டாம்
தரம் கூட்டும் வழிமுறையை மாற்ற வேண்டாம்.

ஜப்பானின் 5 எஸ்

ஜப்பானின் 5 எஸ்ஸை பார்த்தேளா
அதில் சொல்லிருக்க சங்கதிய கேட்டேளா?

அயல் நாட்டு சங்கதியெல்லாம் உனக்கேண்டி ?
அவன் டஸ் புஸ்ஸுன்னு  என்னென்னமோசொல்லுவாண்டி

நிறுவனத்தில் 5 எஸ் பற்றி சொல்லித் தந்தாளா?
கற்றதை என்னிடம் கற்றுக் கொடுக்க நீங்க மறந்தேளா ?
மாமா நீங்க மறந்தேளா ?

செய்ரி, செய்டான், செய்சோ என்றால் உனக்கு தெரியாது.
செய்கட்சு,சிட்சுகே சொல்லணும் என்றால் வாய்க்குள் நுழையாது
வார்த்தை  வாய்க்குள்  நுழையாது.

சுத்தம் பற்றிய கோட்பாடென்று 
சொன்னால் தெரியாதா
வீட்டை இன்னும் சுத்தமா வெச்சுக்க உதவக் கூடாதா
சொல்லி உதவக் கூடாதா?

சுத்தம் சோறு   போடும்  என்று   சொன்னது நாம்தாண்டி
சுத்தத்துக்கே விளக்கம் சொன்னதில் இந்தியா முன்னோடி
நம்ம இந்தியா முன்னோடி

பேசி எந்தப் பலனுமில்ல செயலில் காட்டனும்
செயலில் காட்டிய ஜப்பான் 5 எஸ் கற்றுக் கொடுக்கணும்
நீங்க கற்றுக் கொடுக்கணும்.

அப்படியா இப்பச் சொல்றேன் கேட்டுக்க...
தேவையில்லாப் பொருளையெல்லாம் அப்புறப்படுத்தனும்
அப்புறப்படுத்தி  ஒழுங்குபடுத்தி துப்புரவாக்கணும்.
அந்தந்தப் பொருளை அந்தந்த இடத்தில் அடுக்கி வைக்கணும்
எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வெச்சுப் பழகனும். நாம வெச்சுப் பழகனும்.
நாள் தோறும் நடைமுறையில் கடைபிடிக்கணும்
கடைபிடிக்கும் நடைமுறையை பழக்கமாக்கணும்

இதுதானா 5 எஸ்  ஈசிங்க
இதைக்  கடை பிடிக்க நானும் இப்ப ஒகேயிங்க

தேவைக்கு மேலே சேர்த்து வைப்பதில் நீதான் கில்லாடி
தேவையில்லாப் பொருளை ஒதுக்க மனசு வருமோடி

உனக்கு மனசு வருமோடி ?  

போட்டுக்க செருப்பு
நாலு ஜோடி
கட்டிக்க சேலை
பீரோ நிறைய
பண்ட பாத்திரம்
வீடு முழுக்க

கட்டிக்க சேலை வாங்கிக் குவித்தா
எண்ணிக்கை கூடுமடி
பீரோ  எண்ணிக்கை கூடுமடி
பண்ட பாத்திரம் வீட்டை நிறைச்சால்
சுத்தம் எப்படிடி?
அடியே சுத்தம் எப்படிடி?

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
எனக்குத் தெரியுங்க
மாற்றம் கண்டு வியந்து என்னை
போற்றப் போறீங்க.
என்னை போற்றப் போறீங்க .














Saturday 12 October 2013

காதல்


காதல் ...
அளவில்லா உயிர்களின்
அரும்பும் உணர்வு

காதல் ...
பலரின்
தடம் பதித்த பாதை

காதல்...
மலர்ந்து
மனம் பரப்பும் பூஞ்சோலை

காதல் ...
பல சரித்திரங்களின் பின்னணி
பல சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி
பல சாதனைகளின் எழுச்சி

காதல் ...
இதன் விளிம்பைத் தொட்டு
விலகுபவர் பலர்
மூழ்கி முததெடுப்பவர் சிலர்

காதல் ...
இனக் கவர்ச்சியால்
கவரப்பட்டவர்கள்
விரைவில்
சோர்ந்து விடுகின்றாகள்

காதல் ...
மனக் கவர்ச்சியால்
மகிழப்பட்டவர்கள்
அன்போடு
சேர்ந்து வாழ்கிறார்கள்

ஈதலும்
இசைபட வாழ்தலும்
வள்ளுவன் வகுத்த பாதை

காதலும்
கண்பட வாழ்தலும்
காதலின் மங்காத பாதை

Thursday 10 October 2013

வலியில்லா பட்டாசு


இந்த ஆண்டின் புதுவரவென்ன ?
அந்த பிராண்டின்
தனிச் சிறப்பென்ன ?

பட்டாசுப் பட்டியலில்
பலவிதமாய்ப்
புதுவகைகள்

சரம் சரமாய் ...
விதம் விதமாய் ...
வானத்தில்
வர்ண ஜாலமாய் ..

ஓசையுடன்
மனதை அள்ளும
ஒன்றன் பின் ஒன்றாய்
ஓவியமாய் வந்திறங்கும்

சிறிய திரியின்
சிறப்பு ஒளியும் ஒலியும்
ஊரெல்லாம்
வெளிச்சம் காட்டும்

பார்த்துப் பூரிக்க
பல மாதம் முன்பே
களை கட்டும்
பட்டாசுத்  தொழிற்சாலை

கண்ணுக்கு விருந்தாக
விற்பனைக்கு வருமுன்னே
காண்கின்ற விபத்தாலே
கண்களிலே கண்ணீர்தான்

ஆனந்தத்தின் அடையாளத்தை
உருவாக்கும் ஆர்வத்தில்
உயிர் காக்க மறக்கலாமா?
விபத்துதான் தொடரலாமா?

தற்காப்பு தழைக்கட்டும்
பாதுகாப்பு சிறக்கட்டும்
பட்டாசு ஓசையில்
சந்தோசம் மட்டும் நிலவட்டும்.










நம்பிக்கை தளராதே



வாழு
உன் உயர்வுக்காய் வாழு - இந்த
உலகின் உயர்வுக்காகவும் வாழு.

எதிர் நீச்சல் பழகியவனுக்கு
எதிராளியைப் பற்றி
பயம் எதற்கு?
சுயம் முன்னேற முன்னேற
பயம் பின் வாங்குகிறது

வியர்வை முத்துக்களின்
பிடியில் தான்
உலகின் சொத்துக்கள்
படர்ந்து கிடக்கின்றது
எடுத்து மகிழ்பவர்கள சிலர்
ஏமாந்து மடிபவர்கள் பலர்

பலரில் ஒருவனாவாதும்
சிலரில் ஒருவனாவதும்
விதியல்ல நண்பனே
நாம் கொண்ட நம்பிக்கை

விதைக்கிற விதைதான் முளைக்கும்
வீரியமும் கவனமும்
காரியத்தின் அனுகூலங்கள்

இருக்கிற போதும்
இழக்கிற போதும்
இயல்பாய் இருப்பவர்களை
உலகம் நிச்சயம்
அடையாளம் காட்டும்

முடியாதென ஒய்ந்திருப்பது
இயலாமை
முடியும் என முயற்சி செய்வதே
ஒவ்வொருவரின் கடமை

இரைப்பை காலியானால்
இயல்பாய் இருக்க முடியாது
நம்பிக்கை காலியானால்
உலகில் வாழவே பிடிக்காது

நம்பிக்கை அஸ்திவாரத்தில்தான்
எண்ணம் ஈடேருகிறது
ஏற்றம்  கிட்டுகின்றது.