மனதின் வெளிப்பாடு


Monday 4 June 2012

வேண்டாமடி உயிர் உனக்கு



சிற்பி சொன்னான்
சிலையைப்  பார்த்து
என் கலையிற் பிறந்த சிலையே
அடைந்தாய்  சிறந்த உருவே ....

இந்தச் சின்ன உளி
என் விரல் கொண்டு
உன் மீது

களி நடம்  புரிந்ததாலே
கல்லாய் இருந்த  நீயும்
பெண்ணாய் மாறி விட்டாய்
கண் கவர் அழகைப் பெற்றாய்

கடவுளும் படைக்கிறார்
நானும் படைக்கிறேன்
உனக்கு உயிரூட்டும்
சக்தி மட்டும் எனக்கில்லை
வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு
நீ உயிர் பெற்றால்
தனித்திருக்கும் உனக்கு
துணை  தேட வேண்டும்
 துணைவர்கள் தூயவர்களா
கண்டறியும் சக்தி எனக்கில்லை

இந்த மண்ணில் உள்ளோர்
புறத்தைக்  காட்டி
அகத்தை மறைக்கும்
அற்புதக் கலையில் வல்லவர்கள்
சிற்பக் கலை பயின்ற எனக்கு
அந்த மர்மக் கலை ஏனோ புரியவில்லை
அதனால் நீ ஊனமாவதை விரும்பவில்லை

 பொன் தருவார் என்பதாலே
புண் பட்ட அவளைக் கூட
பெண் கேட்டுச் செல்கின்றார்
மாடிப்படியேறி
பண பட்டு நின்றிருந்தும்
பல பெண்கள் பெண் கேட்க வழியில்லாமல் ....

வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு

பொது வாழ்வில் நேர்மைக்கோ
பஞ்சமாகிப் போனதனால்
போய் விட்டார் மகாத்மாக்கள்
பொது வாழ்வைத் துறந்து விட்டு

பூவுக்கும்  பொட்டுக்கும்
ஆசைப் பட்டு
பெற்றோர் போட்ட
நகைகளை கணவனுக்கு
கேட்ட போதெல்லாம்  தந்து விட்டு
கையில் குழந்தையுடன்
கசிகின்ற  கண்ணீருடன்  பல பெண்கள்
அதனால்
வேண்டாமடி பெண்ணே
உயிர் உனக்கு


சிலை அழுதது கண்ணீர் விட்டு
தன்னருகே நடந்து சென்ற
பெண்ணைப் பார்த்து
பெண்ணின் அவலங்களை நினைத்தா
இல்லை
தனக்கு உயிரில்லையே என்று







No comments:

Post a Comment