மனதின் வெளிப்பாடு


Saturday, 30 November 2019

கீதம்



இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

என்னுள் புகுந்த கவலையெல்லாம்
உன்னால் தூரம் போகுமே
மனபாரம் வெகுவாய் குறையுமே
என்னுள் புதைந்த பலவற்றை
உன்னால் மீட்டு எடுக்கின்றேன்
காற்றில் மிதந்து என் காதில் நீ
பட்டால் கவலை மறக்கின்றேன்.

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

உன் ராகம் தாளம் அறியவில்லை
அதை அறிய ஏனோ முயலவில்லை
இருந்தும் என்னை நிறைக்கின்றாய்
மனதில் மகிழ்ச்சி புரிகின்றாய்
காற்றில் கலந்த நீ
கண்ணில் என்றும் படவில்லை
காதில் நுழைந்த நீ
என்றும் என்னை விடவில்லை

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

உலகம் முழுதும் எண்ண அலைகள்
அதை உணரத்தானே ஆன்மீக வழிகள்
நம்மை இணைக்கும் அதிர்வலைகள்
நம்மோடு இருக்கும் உணர்வலைகள்
புண்ணுக்கு தடவும் மருந்தே
புவி யாவும் உனக்கு விருந்தே
அவரவர் தேவை அறிந்து -நீ
ஆற்று சேவை தொடர்ந்து.

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

புவி ஈர்ப்பால் நடக்கின்றேன்
பாதை  பல கடக்கின்றேன்
உன் ஈர்ப்பால் மகிழ்கின்றேன்
உலகில் நான் வாழ்கின்றேன்

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா












உலக எய்ட்ஸ் தினம்


(World AIDS Day)
                                             (01-12-2019)

மனிதனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் எத்தனையோ தீமைகளில் முக்கியமான அங்கம் வகிப்பது எய்ட்ஸ் ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு- கலாச்சாரம். அதனைப் போற்றி காப்போம் .உலகில் எய்ட்சை ஒழிப்போம். 

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக
ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாட்டு மெட்டில் நான் எழுதிய பாடல்.

உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்
மனிதன் செய்யும் தவறாலே
அதுதான் பரவுது படுவேகம்
எய்ட்சை வெல்ல ஆயுதம்  எதற்கு ?
ஆசை துறந்தால் வருமோ எய்ட்ஸ் .?

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

அவளின் மீது அவனுக்காசை
பணத்தின் மீது அவளுக்காசை
ஆசை தான் அழிவைத் தருகிறது
உணர்ந்தும் மனமோ அலைகிறது
அலையும் மனதை அடக்கி வைத்தால்
நீதான் அதற்கு எஜமானன்
அலையும் மனதை அலையவிட்டால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு
நலமாய் வாழும் முடிவை எடு.

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

குடும்பம் இருக்கு குழந்தைகள் இருக்கு
கண்டவரோடு சரசங்கள் எதற்கு ?
கற்பு என்பது ஒழுக்கமடா
அதில் ஆணும் பெண்ணும் அடக்கமடா
ஆசை எல்லை மீறும்  போது
தவறு நேர்ந்திடும் தன்னாலே
அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்
உன்னிடம் உள்ளது உயர்வாலே
உடலின் உணர்ச்சிகள்  இயல்பாகும்
தவறாய்த்  தீர்ப்பது நோயாகும்

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

உன்னை அடைந்து உறவை அடைந்து
கருவில் வளரும் குழந்தையை அடைந்து
பரவும் நோய் தான் எயட்சாகும்
இது குழந்தைக்கும் வருவது தவிப்பாகும்
நாலு சுவர்க்குள் நடக்கும் தவறு
என்று மட்டும் எண்ணாதே
உலகே அறியும் நிலை உருவானால்
அழிவே அதற்கு கிடையாது
ஆசை என்பது அளவோடு
சுகமோ கட்டிய   துணையோடு .

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்) 

Thursday, 28 November 2019

உயரும் வழி



எல்லோருக்கும் எப்போதும்
எல்லாமும் தெரிவதில்லை
என்றாலும் வாழ்கிறோம் எல்லோரும்

வாழ்வின் புரிதலை
புரிந்து கொண்டவர்களை தேடி 
வாய்ப்புகள் வலம் வருகின்றது

தெரிந்ததைக் கொண்டு
தெரிய வேண்டிய இடத்தில்
மிகச்சரியாய் தெரியப்படுத்தி
சந்தோசமாய் நகர்கிறது
சிலரின் வாழ்க்கை

நிறையத் தெரிந்தும்
புரிதல் இல்லாத அறிதலால் 
சங்கடத்தோடு நகர்கிறது
பலரின் வாழ்க்கை

அன்றாட வாழ்வில்
அநேக  விஷயங்கள்
அனுதினமும் அரங்கேறுகின்றது

கற்றவர்கள் எல்லாம் பெற்றார்களா?
எல்லாம் பெற்றவர்கள் கற்றவர்களா?
பட்டம் அறிதலின் அங்கீகாரம் 
மதிப்பெண் அதன் அடையாளம்
அடையாளத்தை மையப்படுத்தி மட்டும் வாய்ப்புகள் நிலைப்பதில்லை...

சூழ்நிலையை புரிந்து
கற்றதை வாழ்வோடு பொருத்தும்
சக்தியைப் பெற்றவர்களே 
சாதிக்கிறார்கள்

உழைப்பில் உண்மையும்
நேர்மையும் அவசியம்
அதைவிட
அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு
ஒவ்வொருநாளும் சிந்திப்பது
மிக மிக அவசியம்.

உன்னை அறி முதலில்
உயரும் வழி எதிரில்
உண்மையான அறிதலால்
புரிதல் மேம்படும்

புரிதல் மேம்பட
பாதை தெரிந்திடும்
பாதை தெரிந்திட
பயணம் தொடர்ந்திடும்
பயணம் தொடர்ந்திட
உலகம் வசப்படும்.








நட்பின் சங்கமம்



முக்கடலும் சங்கமிக்கும்
இந்தியாவின் தென்கோடியாம்
குமரி முனையில்
முன்னாள் மாணவர்களின்
பாசமிகு சந்திப்பால்
பரவசமடைகிறேன்.

ஆர்ப்பரிப்பது கடலலை
நம்மோடு பிணைந்திருப்பது பாசவலை
பாசப்பிணைப்பால் ஏற்பட்டுள்ளது
இப்படியொரு இணைப்பு

அவ்வப்போது சிலரை
அருகில் இருந்தோரை
ஆர்வமுடன் சந்தித்தோம்
தொலைவில் இருந்தவரோடு
தொலைபேசியில் பேசினோம்
பழகினோம் என்றாலும்
அனைவரையும் 
ஒன்றுதிரட்டுகின்ற நிகழ்வு
ஒரு சேர சந்திக்கும் நிகழ்வு
மிகச்சிறந்த நிகழ்வு
மனம் நிறைய மகிழ்வு

கல்லூரியில் இணைந்தோம், 
ஆர்வமுடன் பயின்றோம்
ஆளுக்கு ஒருதிசையில்
ஆரவாரமின்றி பறந்தோம்
எத்தனை ஆண்டுகள் கழிந்தன?
நம்மில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தன?
கண்டு கண்டு களிப்போம், 
எண்ணி எண்ணிப் பூரிப்போம்.

கண்களால் பார்த்து
வார்த்தைகளால் பூரித்து
அன்பைக் கொட்டி
அன்பைப் பெற்று
அளவளாவி மகிழ்வது தனிச்சிறப்பு.
அவரவர் வாழ்வில்
மறக்க முடியாத நாட்கள் சிலவாகும்.
மறக்க முடியாத நாட்களில்
இதுவும் ஒன்றாகும்
நினைக்க நினைக்க நிறைவாகும்

நட்பை நேசிக்கும் அனைவராலும்
நட்பு பிரகாசமடைகிறது,
சொந்த பந்தம் கொண்டாடும்
ஊர் திருவிழா போல
நட்பைக் கொண்டாடும் சொந்தங்கள்
நட்புக்காக கடல் தாண்டி பயணித்து
நம்மோடு கலந்திருப்பது தனிச்சிறப்பு
அதுவே நட்பின் பெருஞ்சிறப்பு.

அன்று நம்மோடு இருந்த சிலர்
இன்று இல்லாதிருக்கலாம்
இன்னும் சிலர் நோயுற்று இருக்கலாம்.
அத்தகைய நட்புக்காக மனம் வருந்துவோம்
பிறப்பும் இறப்பும் அவன் கையில்
வாழ்கின்ற வாழ்வே நம் கையில்
உயரிய நட்பின் உன்னதத்தை
பறை சாற்றுவோம்
மீண்டும் மீண்டும்  சந்தித்து
மகிழ்ச்சி காண்போம்.

எத்தனை முறை சந்தித்தோம்
என்பதை விட
மீண்டும் எப்போது சந்திப்போம்?
என்று இதயம் துடிப்பது
உண்மையான நட்பு.

பணி ஒய்வு வாழ்த்து



பணி நிறைவை வாழ்த்துகிறேன்
மன நிறைவாய் போற்றுகிறேன்

இனிய நண்பர் ஆறுமுகம்
நட்பால் சிறந்தவர்
அன்பால் உயர்ந்தவர்
அ, ஆ என்பது உயிர் எழுத்தின் தொடக்கம்
அலாவுதீன், ஆறுமுகம் உயர் நட்பின் பொருத்தம்
இயல்பாய் அமைந்தது
இனிதாய் தொடர்வது.

நட்பு எல்லைக்கு அப்பால்
 நட்ப்புக்கள் பலர் இருந்தாலும்
நடப்பில் தொடர்பவர்கள் சிலர்
உயர் நட்பாய் உறுதுணை இருந்தவர்
உன்னதமானவர்
வசீகரிக்கும் பேச்சால்
நம் அனைவரின் மனம் கவர்ந்தவர்

வாய்ப்புகளை பயன்படுத்துவதில் வல்லவர்
வாய்ப்புக்களை தவற விடக் கூடாதுஎன
அனைவருக்கும் போதிக்கும் நல்லவர்
பேச்சு, பட்டிமன்றம்,  நாடகம்கதை, கவிதை, வானொலி உரை என
பன் முகங்களுக்கு சொந்தக்காரர்
இதை உணர்ந்து தானோ என்னவோ
பெற்றோர் இவருக்கு ஆறுமுகம் எனப் பெயரிட்டுஅன்பாய் அழைத்தனரோ?

முகநூலில் இவரின் பதிவுகள்பலரின் மனங்களிலே பதிந்திருக்கின்றன.
அன்றாட வாழ்வினிலேஅவசியம் எனப்படும்ஆன்மிகம் உள்ளிட்டஅனைத்து விஷயங்களையும்
நட்பு வட்டத்துக்கு செய்தியாய் பரப்பிநட்பை சிறப்பித்தவர்
அனைவரும் நலம் வாழ முயற்சித்தவர்.

திருநெல்வேலி அல்வாவை தீபாவளிப் பண்டின் மூலம்அனைவருக்கும் பகிர்ந்தளித்துஅல்வா ஆறுமுகம் என அன்போடு அழைக்கப்பட்டவர்.
இருட்டுக்கடை அல்வாவைதரத்துக்கு சான்றாக பன்முறை தன பேச்சில் தெரிவித்தவர்.

இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்துநெல் காத்த ஊரே
நெல்வேலி ஆகி திருநெல்வேலி ஆனதாக வரலாறு.
திருநெல்வேலி இவரின் சொந்த ஊர்.
நெல்லை மண்ணும், நெல்லையப்பர் ஆலயமும்இவரின் நீங்காத நினைவுகள்.

உழைக்கும் ஆலையையும்வணங்கும் ஆலயத்தையும்சமமாய் நினைப்பவர்
ஆன்மீக தேடலில்அதிகம் நாட்டம் கொண்டவர்.
நான் அறிந்திட பல தகவல் தந்தவர், தருபவர்

எங்கள் மதம் வேறு, மனம் ஒன்று
என் நலத்தை அவரும் அவர் நலத்தை நானும் என்றென்றும் நினைக்கிறோம் நேசிக்கிறோம் , மகிழ்கிறோம்
பணி ஒய்வு என்பதுமாறுபட்ட சாதனைக்கான நிகழ்வு

நண்பர் ஆறுமுகம்நீடுழி வாழ வேண்டும்
புதிய சாதனைகள் நிகழ்த்த வேண்டும்.

இலக்கை நோக்கி


இலக்கை நோக்கிய பயணம்
வாழ்வை வசந்தமாக்கும் பயணம்

இலக்கு இல்லாத பயணம்
துடுப்பு இல்லாத படகு போன்றது

இலக்கை தீர்மானித்து
உழைப்பை  சீர்படுத்து

இலக்கு என்பது உந்துசக்தி
திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்பு

ஜே கே பென்னரின்
நமக்கான பங்களிப்பின்
சென்ற ஆண்டுகளின்
இலக்கை எட்டினோம்
மகிழ்கிறோம்.. பூரிக்கிறோம்.

இந்த ஆண்டின் இலக்கு
............ கோடி
கூட்டு முயற்சியின்
கூடுதல் பலம் மட்டுமல்ல
இன்னும் சக்தி தரும்
புதிய யுக்திகளும் தேவை.

இழப்பை தவிர்த்து
தரத்தை கூட்டி
செலவை குறைத்து
லாபம் பெருக்கி
நிறுவனத்தை வளர்த்து
நாமும் வளர
சிந்திப்பது அனைவரின் கடமை

என் சிந்தனையின் முன்னணியில்
சிறகடித்து பறப்பது அவுட்சோர்சிங்.

அளவான குடும்பம்
வளமான வாழ்வு
குடும்பத்தின் மேன்மைக்கு

அளவான ஊழியர்கள்
அதிகரிக்கும் அவுட்சோர்சிங்
தொழிலின் மேன்மைக்கு

திறனில் மேம்பட்ட
பலரின் துணையுடனே
தொழிலை சிறப்பாக்கும்
முறைதானே அவுட்சோர்சிங்

நிறுவன வளர்ச்சியிலே
அன்றாட முறைதனிலே
பொதுத்துறை, தனியார்துறை
அனைவரும் விரும்புகின்ற
முறைதானே அவுட்சோர்சிங்

பணியை பகிர்ந்தளித்து
உற்பத்தியை எளிதாக்கி
வாடிக்கையாளரை வசப்படுத்தும்
முறைதானே அவுட்சோர்சிங்

நம் பணியை நமக்காக
நாம் விரும்பும் வகைதனிலே
முன்னேற்றப் பின்னணியில்
உருவாக்கி சமர்ப்பிக்கும்
முறைதானே அவுட்சோர்சிங்

சிந்தனையின் நாட்டமெல்லாம்
தரத்தை மேம்படுத்த
புதியன படைக்க என
எண்ணத்தை எளிதாக்கி
செயலை சிறப்பிக்கும்
முறைதானே அவுட்சோர்சிங

பணி செய்யும் இடமெல்லாம்
பொருட்களை குவித்து வைத்து
5 S ஐ பாழ்ப்படுத்தும்
நிலையைப் போக்குகின்ற
முறைதானே அவுட்சோர்சிங்

கண்காணிப்பை பலப்படுத்தி
அவுட்சோர்சிங் உறவுகளை அதிகப்படுத்தி
அவர்தம் திறமைதனை வசப்படுத்தி
உற்பத்தியை சிறப்பாக்கி
இலக்கை எளிதாய் எட்டலாம்
உயர்வாய் உலகை வலம் வரலாம்.

பணி நிறைவு வாழ்த்து


பணி நிறைவு வாழ்த்து

.அன்பால், பண்பால், அறத்தால்  உயர்ந்தவரே
இனிய நண்பரே, இன்னுயிர் தோழரே
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே
ஜே. கே  பென்னர் தொழிற்சங்கம் கண்டெடுத்த முத்தே
தொழிற்சங்கத்தின் முன்னாள் முதல்வரே
எங்களின் வழிகாட்டியே ...

பலருக்கு மரத்தடி மரியாதை
செய்வித்த உமக்கு - இன்று
மரத்தடி மரியாதை செய்வதில்
எங்களுக்கு மரியாதை
மகிழ்கிறோம் .. பூரிக்கிறோம் 

தலைமைப் பதவி தானாய் வருவதில்லை
உழைப்போர்களின் அங்கீகாரம்
செயல்திறனின் பிரதிபலிப்பு
உழைப்பின் வெகுமதி 

முன்னாள் தொழிற்சங்க தலைவர்களோடு
இணைந்து செயல்பட்டு அனுபவம் பெற்றீர்
அளப்பரிய அனுபவத்தை  ஆதாரமாக்கி
ஜே. கே  பென்னர் தொழிற்சங்கத்தை
தலைமையேற்று வழிநடத்தினீர்
தொழிலாளர் நலம்வாழ வழிகாட்டினீர் 

ஊதிய உயர்வு ஒப்பந்தம்
இருமுறை நிகழ்ந்தது உம் தலைமையில்
ஜே. கே  பென்னர் உற்பத்தி பிரிவு
மதுரையில் நீடித்து நிலைப்பதற்கு
இக்கட்டான தருணங்களில்
தொழிற்சங்கத்தின் அரவணைப்பை தந்தீர்
தொழிலாளர்களின் அரணாக நின்றீர் .

மனதில் சரியெனப்பட்டதை
உணர்ந்து செயல்பட்டீர் .
தொழிலாளர் நிர்வாத்திடையே
சிறந்த பாலமாக திகழ்ந்தீர் .
உமது அன்பால் மகிழ்ந்திருக்கிறோம்
உதவும் பண்பால் வியந்திருக்கிறோம்

நட்பை நேசிக்கும் நல்லவரே
தொண்டுள்ளம் கொண்ட பண்பாளரே
தலைக்கணம்  சிறுதும் உமக்கு இல்லை
அதனால் விரிகிறது நட்பு எல்லை
உமது நட்பு வட்டம் பெரிது.

இன்று உமக்கு பணி ஓய்வு
சாய்வு நாற்காலியில் அமர்ந்து
ஓய்வு எடுக்க அல்ல பணி ஓய்வு
மாறுபட்ட சாதனைக்கான
ஒரு நிகழ்வே பணி ஓய்வு
உடல் திறன் உள்ளவரை
உள்ள உறுதியோடு தொண்டாற்றி சிறக்க
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம் 

அன்னை மீனாட்சியின் அருளோடு
அன்பான குடும்பத்தின் அரவணைப்போடு
அளவில்லா நட்புகள் துணையோடு
வாழ்வு சிறக்க வாழ்த்துகிறோம்