மனதின் வெளிப்பாடு


Thursday 28 November 2019

நட்பின் சங்கமம்



முக்கடலும் சங்கமிக்கும்
இந்தியாவின் தென்கோடியாம்
குமரி முனையில்
முன்னாள் மாணவர்களின்
பாசமிகு சந்திப்பால்
பரவசமடைகிறேன்.

ஆர்ப்பரிப்பது கடலலை
நம்மோடு பிணைந்திருப்பது பாசவலை
பாசப்பிணைப்பால் ஏற்பட்டுள்ளது
இப்படியொரு இணைப்பு

அவ்வப்போது சிலரை
அருகில் இருந்தோரை
ஆர்வமுடன் சந்தித்தோம்
தொலைவில் இருந்தவரோடு
தொலைபேசியில் பேசினோம்
பழகினோம் என்றாலும்
அனைவரையும் ஒன்றுதிரட்டுகின்ற நிகழ்வு
ஒரு சேர சந்திக்கும் நிகழ்வு
மிகச்சிறந்த நிகழ்வு
மனம் நிறைய மகிழ்வு

கல்லூரியில் இணைந்தோம், பயின்றோம்
ஆளுக்கு ஒருதிசையில்
ஆரவாரமின்றி பறந்தோம்
எத்தனை ஆண்டுகள் கழிந்தன?
நம்மில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தன?
கண்டு கழிப்போம், எண்ணி பூரிப்போம்.

கண்களால் பார்த்து
வார்த்தைகளால் பூரித்து
அன்பைக் கொட்டி
அன்பைப் பெற்று
அளவளாவி மகிழ்வது தனிச்சிறப்பு.
அவரவர் வாழ்வில்
மறக்க முடியாத நாட்கள் சிலவாகும்.
மறக்க முடியாத நாட்களில்
இதுவும் ஒன்றாகும்
நினைக்க நினைக்க நிறைவாகும்

நட்பை நேசிக்கும் அனைவராலும்
நட்பு பிரகாசமடைகிறது,
சொந்த பந்தம் கொண்டாடும்
ஊர் திருவிழா போல
நட்பைக் கொண்டாடும் சொந்தங்கள்
நட்புக்காக கடல் தாண்டி பயணித்து
நம்மோடு கலந்திருப்பது தனிச்சிறப்பு
அதுவே நட்பின் பெருஞ்சிறப்பு.

அன்று நம்மோடு இருந்த சிலர்
இன்று இல்லாதிருக்கலாம்
இன்னும் சிலர் நோயுற்று இருக்கலாம்.
அத்தகைய நட்புக்காக மனம் வருந்துவோம்
பிறப்பும் இறப்பும் அவன் கையில்
வாழ்கின்ற வாழ்வே நம் கையில்
உயரிய நட்பின் உன்னதத்தை
பறை சாற்றுவோம்
மீண்டும் மீண்டும்  சந்தித்து
மகிழ்ச்சி காண்போம்.

எத்தனை முறை சந்தித்தோம்
என்பதை விட
மீண்டும் எப்போது சந்திப்போம்?
என்று இதயம் துடிப்பது
உண்மையான நட்பு.

No comments:

Post a Comment