மனதின் வெளிப்பாடு


Monday, 13 October 2025

வாய்மையே வெல்லும்

வாய்மையே வெல்லும்
மனதில் பதிந்த வாசகம் 
மனிதனை மனிதனாக 
உருவாக்கும் சிறந்த வாசகம்..

பொய்மையைப் புறந்தள்ளி 
வாய்மையை வளர்த்தெடுக்க 
பாரினில் மனித இனம் 
மகிழ்வுடன் வாழ்ந்திருக்க
உண்மைக் கூற்றே உயர்ந்ததென்று
தமிழினம் வழங்கிய வாசகம் 
வாய்மையே வெல்லும்...

 நீதியை நிலைநாட்டும் 
அனைத்து நீதி அரசர்களின்
இருக்கையின் அருகில் 
பதிந்திருக்கும் வாசகம் 
வாய்மையே வெல்லும்..

கண்ணால் காண்பது பொய் என்றும் 
தீர விசாரிப்பதே மெய் என்றும் 
கண்ணை கட்டிக் கொண்ட 
நீதி தேவதையின் காலடியில் 
சாட்சிகள் அற்ற உண்மைகள்
சாகடிக்கப்படுகின்றன..

சம்திங் பெற்றுக் கொண்டு 
வளைந்து கொடுக்கிறது வாய்மை
சொல்வதெல்லாம் உண்மை என்று 
சத்தியம் செய்துவிட்டு 
பொய் சாட்சி சொல்வது
பலரின் வாடிக்கையாகிவிட்டது..

சிலரின் தேவைக்காக பலரை வதைப்பதும் 
வாதத் திறமையினால் உண்மையை 
குழி தோண்டி புதைப்பதும் 
வாய்மைக்கு வருத்தம் அளிக்கிறது..

உண்மையை பேசுபவர்கள் 
உயர்ந்த நிலை அடைய முடியாதென்று
உலகத்தார் பேசிக் கொள்வதும் 
அது உண்மைதான் என்று 
பெரும்பாலோர் நம்புவதும்
வாய்மையை யோசிக்க வைக்கிறது...

வக்கீல்களின் வாதத் திறமை 
வாய்மையற்ற  தீர்ப்புகளுக்கு
வழிவகுக்கின்றன..

தற்போதைய வாழும் சூழலில்
வாய்மையாளர்களும், 
நேர்மையாளர்களும் 
பாராட்டி கௌரவிக்கப்படுகிறார்கள்
அவ்வப்போது..

சாதனையாளர்கள் தானே
கவுரவிக்கப்படுவார்கள்?
வாய்மையும் நேர்மையும் 
கடைப்பிடிக்க வேண்டிய 
வாழ்வியல் முறையென்றுதானே
வழிகாட்டப்பட்டது?
சாதனை என்று எப்போது
அங்கீகரிக்கப்பட்டது?

வாய்மைக்கு உதாரணம் கேட்டால்
அரிச்சந்திரன் என்கிறோம்..
என்னைப் பொறுத்தவரை 
எல்லோரும் வாய்மையே பேசுகிறோம்
வாய்மைக்கு நான் என்று பதில் சொல்ல
எல்லோருக்கும் தயக்கம் 
தன்னிடம் வாய்மையில்லை என 
உள்ளதை தான் சொல்கிறோம் 
வாய்மையே வெல்லும் என்கிறோம்
 வாய்மையே கடைப்பிடிக்க தயங்குகிறோம்..








No comments:

Post a Comment