மனதின் வெளிப்பாடு


Monday, 2 December 2019

படைப்பின் நோக்கம்


படைப்பின் நோக்கம் 
படைத்தவன் அறிவான்
பாழும் நெஞ்சே கலங்காதே
உந்தன் கவலை மாற்றும் சக்தி
அவனிடம் உண்டு மறவாதே

உன்னால் முடியும் உந்தன் பணியை
அனுதினம் செய்ய மறவாதே
தானாய் எப்படி மாறும் என்று
வீணாய் கவலை கொள்ளாதே

உன்னை காட்டிலும் கீழே உள்ளோர்
உலகில் மக்கள் பலர் ஆவார்
அவர் நலம் பற்றி  அ௧்௧றை கொண்டால்
உன் நலம் பற்ற பலர் வருவார்

 பற்றற்று இருக்கப் பழகி விட்டால்
 பற்றும் முதல் கரம் படைத்தவனே
 திக்கற்று திரியும் மனம் தன்னை
 திசை திருப்புவதும் அவன்தானே

படைத்தவன் நினைவு பெருகி விட்டால்
பழம் கஞ்சியும் அமிர்தமாகும்
மனதில் பெருகும் ஆசை எல்லாம்
தானாய் மறைந்து சரியாகும்.

  இல்லறம் துறவு எதுவானாலும்
 இயல்பாய் இருத்தல் அவசியமே
 மதில் மேல் பூனை ஆகாமல்
 மனதில் மகிழ்ச்சி அவசியமே

 பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
 பிறந்தவர் இறவாமல் இருந்ததில்லை
 உணர்ந்தால் வாழ்வில் ஏது தொல்லை
 உணர்ந்தவர் செயலால் அழிவதில்லை

 மதம் மனிதனுக்கு வழிகாட்டும்
 மனிதம் மனிதனை வாழ்விக்கும்
 மனம் முழுவதும் மனிதம் நிறையட்டும்
 படைப்பின் நோக்கம் செயலில் தொடரட்டும்.!

Sunday, 1 December 2019

தரக் குழுவின் மேன்மை



ஒவ்வொரு மனிதருமே சொல்லுவதே 
தரம் என்றால் பொருளோட உயிர் தானே
ஒவ்வொரு பொருட்களுமே சொல்லுவதே
 தரம் போனால் தங்காது சந்தையிலே
குழுவாய் இணைதல் வேண்டும் நம் தொழிலில்
குறைகள் எளிதாய் தீரும் வெகுவிரைவில்

தரமே ஓ தரமே நீ கூடி விடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகிவிடு

குழுவாய் கூடி விவாதிப்போம்
குறைகள் பற்றி யோசிப்போம்
நம் தொழிலின் வளர்ச்சி பற்றி 
நாள் முழுதும் சிந்திப்போம்

எந்தத் தொழிலில் குறையில்லை
எந்தச் செயலில் தடையில்லை
தடைகள் போக்கும் பணிகள் எல்லாம்
திறனைக் கூட்டும் வழிமுறைகள்

குறை நீக்கும் குழுக்கள் எல்லாம்
நிறுவனத்தில் உயர்வாகும்
குழுவில் அங்கம் நீயும் என்றால்
உன்னை வாழ்த்திப் புகழ்பாடும்

யாருக்கில்லை சிந்தனைகள்? (2)
ஆக்கபூர்வ சிந்தனைகள்

குழுச் சிந்தனையில் 
வரும் துளிகள் எல்லாம்
பெரும் உயர்வுக்கு வழிகாட்டும்
நம் குறை உணர்ந்தால்
அதை தினம் முயன்றால்
தீர்வும் வெளியாகும்...

தரமே ஓ தரமே நீ கூடிவிடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகிவிடு

கற்ற பாடம் பலவாகும்
பெற்ற தீர்வு சிலவாகும்
முயன்று நாமும் உழைத்தால் தானே
சிந்தையெல்லாம் செயலாகும்

வளரும் நாடு நாமென்ற
தாழ்வு இன்னும் நமக்கு எதற்கு?
முடியும் என்று போராடு
உயர்ந்த தரக்குழுவோடு

வெற்றி என்ற இலக்கு எல்லாம்
அனைவருக்கும் பொதுவாகும்
நாம் பெற்றிடுவோம் என நினைப்பதெல்லாம்
அவரவர் வாழ்வின் இயல்பாகும்

திறமை இருக்கு உன்னோடு
உயர்ந்த தரக்குழுவோடு
நம் கரம் இணைந்தால்
அது தரம் கொணர்ந்தால்
தொடர் வெற்றியும் எளிதாகும்

தரமே ஓ தரமே நீ கூடி விடு
திறனே உற்பத்தித்திறனே நீ பெருகி விடு.

ஏழ்மை



வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

சந்தோசமா வாழ்ந்திடத்தான் அனைவருக்கும் இஷ்டம்தான்
ஏழை செய்யும் தொழிலில் எல்லாம் வந்திடுதே நஷ்டம்தான்

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

பணக்காரன் வச்சதுதான் சட்டங்க
பொருளை பதுக்கி வைச்சு வித்தாக்க குத்தங்க
உழவு செய்யும் விவசாயிக்கு நஷ்டங்க
வாங்கி விற்கும்  தரகருக்கு லாபங்க.

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

ரோட்டோரம் குவித்து விக்கும்  வெங்காயம்
பார்த்துகிட்டே நடந்திருப்போம் தினம்தோறும்
பதுங்கிருச்சு ஊருக்குள்ள பக்குவமா
விலை கேட்டா தலை சுத்தும் நிச்சயமா

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

கடன் வாங்கி வாங்கிபுட்டா வாகனம்
கடன் கட்டிடத் தான் தினந்தோறும் சாகணும்
ஏழைக்கு கூடாதுங்க ஆசை
ஏக்கப் பெருமூச்சே அவனுக்கான ஓசை

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்

பொதுத்துறை தான் தனியாரா மாறுது - அதில் பணிபுரிந்தோர் உள்ளமெல்லாம் வாடுது
 வேலையில ஏதுமில்ல நிரந்தரம்
கலங்குறானே தொழிலாளி தினம் தினம்

பொருளாதார வீழ்ச்சின்னு சொல்றாங்க
மாற்றம் வரும் நம்புங்கன்னு சொல்றாங்க
ஏமாறும் ஏழைய பாருங்க - அவன் அடிப்படைத் தேவையை உணருங்க.

வாழுறது கஷ்டம் தான்
ஏழை வாழுறது கஷ்டம்தான்



  

Saturday, 30 November 2019

கீதம்



இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

என்னுள் புகுந்த கவலையெல்லாம்
உன்னால் தூரம் போகுமே
மனபாரம் வெகுவாய் குறையுமே
என்னுள் புதைந்த பலவற்றை
உன்னால் மீட்டு எடுக்கின்றேன்
காற்றில் மிதந்து என் காதில் நீ
பட்டால் கவலை மறக்கின்றேன்.

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

உன் ராகம் தாளம் அறியவில்லை
அதை அறிய ஏனோ முயலவில்லை
இருந்தும் என்னை நிறைக்கின்றாய்
மனதில் மகிழ்ச்சி புரிகின்றாய்
காற்றில் கலந்த நீ
கண்ணில் என்றும் படவில்லை
காதில் நுழைந்த நீ
என்றும் என்னை விடவில்லை

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

உலகம் முழுதும் எண்ண அலைகள்
அதை உணரத்தானே ஆன்மீக வழிகள்
நம்மை இணைக்கும் அதிர்வலைகள்
நம்மோடு இருக்கும் உணர்வலைகள்
புண்ணுக்கு தடவும் மருந்தே
புவி யாவும் உனக்கு விருந்தே
அவரவர் தேவை அறிந்து -நீ
ஆற்று சேவை தொடர்ந்து.

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா

புவி ஈர்ப்பால் நடக்கின்றேன்
பாதை  பல கடக்கின்றேன்
உன் ஈர்ப்பால் மகிழ்கின்றேன்
உலகில் நான் வாழ்கின்றேன்

இனிய கீதமே மிதந்து வா
என்னுள் புகுந்து என்னை நிறைக்கும்
இனிய கீதமே விரைந்து வா












உலக எய்ட்ஸ் தினம்


(World AIDS Day)
                                             (01-12-2019)

மனிதனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் எத்தனையோ தீமைகளில் முக்கியமான அங்கம் வகிப்பது எய்ட்ஸ் ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு- கலாச்சாரம். அதனைப் போற்றி காப்போம் .உலகில் எய்ட்சை ஒழிப்போம். 

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக
ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாட்டு மெட்டில் நான் எழுதிய பாடல்.

உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்
மனிதன் செய்யும் தவறாலே
அதுதான் பரவுது படுவேகம்
எய்ட்சை வெல்ல ஆயுதம்  எதற்கு ?
ஆசை துறந்தால் வருமோ எய்ட்ஸ் .?

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

அவளின் மீது அவனுக்காசை
பணத்தின் மீது அவளுக்காசை
ஆசை தான் அழிவைத் தருகிறது
உணர்ந்தும் மனமோ அலைகிறது
அலையும் மனதை அடக்கி வைத்தால்
நீதான் அதற்கு எஜமானன்
அலையும் மனதை அலையவிட்டால்
அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு
நலமாய் வாழும் முடிவை எடு.

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

குடும்பம் இருக்கு குழந்தைகள் இருக்கு
கண்டவரோடு சரசங்கள் எதற்கு ?
கற்பு என்பது ஒழுக்கமடா
அதில் ஆணும் பெண்ணும் அடக்கமடா
ஆசை எல்லை மீறும்  போது
தவறு நேர்ந்திடும் தன்னாலே
அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்
உன்னிடம் உள்ளது உயர்வாலே
உடலின் உணர்ச்சிகள்  இயல்பாகும்
தவறாய்த்  தீர்ப்பது நோயாகும்

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்)

உன்னை அடைந்து உறவை அடைந்து
கருவில் வளரும் குழந்தையை அடைந்து
பரவும் நோய் தான் எயட்சாகும்
இது குழந்தைக்கும் வருவது தவிப்பாகும்
நாலு சுவர்க்குள் நடக்கும் தவறு
என்று மட்டும் எண்ணாதே
உலகே அறியும் நிலை உருவானால்
அழிவே அதற்கு கிடையாது
ஆசை என்பது அளவோடு
சுகமோ கட்டிய   துணையோடு .

(உலகில் உலகில் எயட்சாலே
அடையும்  துயரம் ஏராளம்) 

Thursday, 28 November 2019

உயரும் வழி



எல்லோருக்கும் எப்போதும்
எல்லாமும் தெரிவதில்லை
என்றாலும் வாழ்கிறோம் எல்லோரும்

வாழ்வின் புரிதலை
புரிந்து கொண்டவர்களை தேடி 
வாய்ப்புகள் வலம் வருகின்றது

தெரிந்ததைக் கொண்டு
தெரிய வேண்டிய இடத்தில்
மிகச்சரியாய் தெரியப்படுத்தி
சந்தோசமாய் நகர்கிறது
சிலரின் வாழ்க்கை

நிறையத் தெரிந்தும்
புரிதல் இல்லாத அறிதலால் 
சங்கடத்தோடு நகர்கிறது
பலரின் வாழ்க்கை

அன்றாட வாழ்வில்
அநேக  விஷயங்கள்
அனுதினமும் அரங்கேறுகின்றது

கற்றவர்கள் எல்லாம் பெற்றார்களா?
எல்லாம் பெற்றவர்கள் கற்றவர்களா?
பட்டம் அறிதலின் அங்கீகாரம் 
மதிப்பெண் அதன் அடையாளம்
அடையாளத்தை மையப்படுத்தி மட்டும் வாய்ப்புகள் நிலைப்பதில்லை...

சூழ்நிலையை புரிந்து
கற்றதை வாழ்வோடு பொருத்தும்
சக்தியைப் பெற்றவர்களே 
சாதிக்கிறார்கள்

உழைப்பில் உண்மையும்
நேர்மையும் அவசியம்
அதைவிட
அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு
ஒவ்வொருநாளும் சிந்திப்பது
மிக மிக அவசியம்.

உன்னை அறி முதலில்
உயரும் வழி எதிரில்
உண்மையான அறிதலால்
புரிதல் மேம்படும்

புரிதல் மேம்பட
பாதை தெரிந்திடும்
பாதை தெரிந்திட
பயணம் தொடர்ந்திடும்
பயணம் தொடர்ந்திட
உலகம் வசப்படும்.








நட்பின் சங்கமம்



முக்கடலும் சங்கமிக்கும்
இந்தியாவின் தென்கோடியாம்
குமரி முனையில்
முன்னாள் மாணவர்களின்
பாசமிகு சந்திப்பால்
பரவசமடைகிறேன்.

ஆர்ப்பரிப்பது கடலலை
நம்மோடு பிணைந்திருப்பது பாசவலை
பாசப்பிணைப்பால் ஏற்பட்டுள்ளது
இப்படியொரு இணைப்பு

அவ்வப்போது சிலரை
அருகில் இருந்தோரை
ஆர்வமுடன் சந்தித்தோம்
தொலைவில் இருந்தவரோடு
தொலைபேசியில் பேசினோம்
பழகினோம் என்றாலும்
அனைவரையும் 
ஒன்றுதிரட்டுகின்ற நிகழ்வு
ஒரு சேர சந்திக்கும் நிகழ்வு
மிகச்சிறந்த நிகழ்வு
மனம் நிறைய மகிழ்வு

கல்லூரியில் இணைந்தோம், 
ஆர்வமுடன் பயின்றோம்
ஆளுக்கு ஒருதிசையில்
ஆரவாரமின்றி பறந்தோம்
எத்தனை ஆண்டுகள் கழிந்தன?
நம்மில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தன?
கண்டு கண்டு களிப்போம், 
எண்ணி எண்ணிப் பூரிப்போம்.

கண்களால் பார்த்து
வார்த்தைகளால் பூரித்து
அன்பைக் கொட்டி
அன்பைப் பெற்று
அளவளாவி மகிழ்வது தனிச்சிறப்பு.
அவரவர் வாழ்வில்
மறக்க முடியாத நாட்கள் சிலவாகும்.
மறக்க முடியாத நாட்களில்
இதுவும் ஒன்றாகும்
நினைக்க நினைக்க நிறைவாகும்

நட்பை நேசிக்கும் அனைவராலும்
நட்பு பிரகாசமடைகிறது,
சொந்த பந்தம் கொண்டாடும்
ஊர் திருவிழா போல
நட்பைக் கொண்டாடும் சொந்தங்கள்
நட்புக்காக கடல் தாண்டி பயணித்து
நம்மோடு கலந்திருப்பது தனிச்சிறப்பு
அதுவே நட்பின் பெருஞ்சிறப்பு.

அன்று நம்மோடு இருந்த சிலர்
இன்று இல்லாதிருக்கலாம்
இன்னும் சிலர் நோயுற்று இருக்கலாம்.
அத்தகைய நட்புக்காக மனம் வருந்துவோம்
பிறப்பும் இறப்பும் அவன் கையில்
வாழ்கின்ற வாழ்வே நம் கையில்
உயரிய நட்பின் உன்னதத்தை
பறை சாற்றுவோம்
மீண்டும் மீண்டும்  சந்தித்து
மகிழ்ச்சி காண்போம்.

எத்தனை முறை சந்தித்தோம்
என்பதை விட
மீண்டும் எப்போது சந்திப்போம்?
என்று இதயம் துடிப்பது
உண்மையான நட்பு.