மனதின் வெளிப்பாடு


Monday 2 December 2019

படைப்பின் நோக்கம்


படைப்பின் நோக்கம் படைத்தவன் அறிவான்
பாழும் நெஞ்சே கலங்காதே
உந்தன் கவலை மாற்றும் சக்தி
அவனிடம் உண்டு மறவாதே

உன்னால் முடியும் உந்தன் பணியை
அனுதினம் செய்ய மறவாதே
தானாய் எப்படி மாறும் என்று
வீணாய் கவலை கொள்ளாதே

உன்னை காட்டிலும் கீழே உள்ளோர்
உலகில் மக்கள் பலர் ஆவார்
அவர் நலம் பற்றி  அ௧்௧றை கொண்டால்
உன் நலம் பற்ற பலர் வருவார்

 பற்றற்று இருக்கப் பழகி விட்டால்
 பற்றும் முதல் கரம் படைத்தவனே
 திக்கற்று திரியும் மனம் தன்னை
 திசை திருப்புவதும் அவன்தானே

படைத்தவன் நினைவு பெருகி விட்டால்
பழம் கஞ்சியும் அமிர்தமாகும்
மனதில் பெருகும் ஆசை எல்லாம்
தானாய் மறைந்து சரியாகும்.

  இல்லறம் துறவு எதுவானாலும்
 இயல்பாய் இருத்தல் அவசியமே
 மதில் மேல் பூனை ஆகாமல்
 மனதில் மகிழ்ச்சி அவசியமே

 பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை
 பிறந்தவர் இறவாமல் இருந்ததில்லை
 உணர்ந்தால் வாழ்வில் ஏது தொல்லை
 உணர்ந்தவர் செயலால் அழிவதில்லை

 மதம் மனிதனுக்கு வழிகாட்டும்
 மனிதம் மனிதனை வாழ்விக்கும்
 மனம் முழுவதும் மனிதம் நிறையட்டும்
 படைப்பின் நோக்கம் செயலில் தொடரட்டும்.!

No comments:

Post a Comment