பெண்ணே நீ
சோம்பலுக்குள் மூழ்கி விட்டால்
மீளமுடி யாது! வெறும்
தூக்கம் ஒன்றே நோக்கமென்றால்
நாளைவிடி யாது!
சாம்பலுக்குள் மீண்டெழும் தீ
எளிதில்அணை யாது!
உன் சாதனைக்கு பூமிப்பந்தில்
ஈடு இணை ஏது?
வீறு கொண்டு நீ முயன்றால்
தோல்விநெருங் காது! சிறு
வேதனைக்கும் நீ துவண்டால்
வாழ்வுதுலங் காது!
சீரும் கடல்! மோதும் அலை!
பாறைஉடை யாது! மனத்
தின்மைகொண்டால்
உன்னை வெல்ல
யாரும்கிடை யாது!
இப்போது வாசித்தது
நான் படித்த மரபுக் கவிதை
வாசிக்கப் போவது
நான் வடித்த புதுக்கவிதை
இசைக்கருவிகளை வாசிக்கும் போது
அது இசையாகிறது
நல்ல புத்தகங்களை வாசிக்கும் போது
அறிவுக்கு விருந்தாகிறது
வாசிக்கும் பழக்கம்
குறைந்திருப்பது உண்மை
வாசிப்பை நேசித்தால் அவர்களின்
சிந்தனை திறனுக்கு நன்மை..
அறிவை விருத்தியாக்கும் வாசிப்பு
கற்பனைத் திறனின் கதவைத்
தட்டித் திறக்கும் வாசிப்பு
வீணாக்கும் பொழுதை
உபயோகமாய் மாற்றும் வாசிப்பு
அன்றாட வாசிப்பு - அதை
நேசிப்பவர்களின் குறையாத பூரிப்பு
சமூக வலைத்தள
காணொளி காண்பது தவறு இல்லை
முற்றிலும் அதில் முடங்கிக்
கிடப்பது தான் முறை இல்லை
தொழில் நுட்பத்தின்
வளர்ச்சிக்கு என்றும் முடிவில்லை
அதை முறையாய் பயன்படுத்தினால்
பழுதில்லை
விதைக்குள் ஒளிந்திருக்கிறது விருட்சம்
அவரவருக்குள் ஒளிந்திருக்கிறது
எண்ணற்ற திறமையின் வெளிச்சம்
எழுத்தாற்றலும், படைப்பாற்றலும்
எப்போது வெளிப்படும்?
எவருக்கும் தெரியாது
வயது எழுபதை தாண்டியும்
வெளிப்படும் என்பது
இன்றைய நிகழ்வின் வெளிப்பாடு
உன்னையறி முதலில், உயரும் வழி எதிரில்
நமக்கான திறமையை கண்டு உணர்ந்து
நம்மை தூண்டி தூண்டி
கட்டமைப்பது சிலர்
அத்தகையோரின்
ஊக்கத்தால், உற்சாகத்தால்
பாதை தெரிந்து, பயணம் புரிந்து விட்டால்
அவரவர் திறமை
அடையாளம் கண்டுவிட்டால்
அடைந்திடும் எல்லைகள் ஏராளம்
தொடர்ந்திடும் வெற்றிகள் தாராளம்
தனக்கான தடைகளை தாண்டித் தாண்டி
தன்னை தயார்படுத்த முயற்சித்தால்
திறமைகள் ஊற்றெடுக்கும்
வெற்றிகள் பிரகாசிக்கும்
இல்லாதவர்க்கு, இயலாதவருக்கு
அரசு செய்யும் உதவியை விட
அவரவர் செய்யும் உதவி மேலானது
உதவும் உள்ளங்கள்
இணைகின்ற இடமே கூடானது..
அவ்வப்போது இயலாதவர்களுக்கு
அவர்கள் செய்யும் அநேக உதவிகளே
அதற்கான சான்றானது...
கூடிக் கலைகின்ற கூட்டமல்ல கூடு
கூடி உழைக்கின்ற கூட்டம் கூடு
நலிந்தோர்கள் நலம் வாழ
உதவுகின்ற கூட்டம் கூடு
கூட்டில் முட்டையிட்டு
பறவைகள் குஞ்சு பொரிக்கும்
கூட்டில் இணையும் பெண்களின்
எழுத்தாற்றலை இந்த கூடு
ஊக்குவித்து வெளிப்படுத்தும்
தன்னைப் பற்றிய வரலாற்றை
தானே எழுதினால் சுய சரிதை
தாயைப் பற்றி தலைமகள்
எழுதி இருக்கிறார்
அவர் சாதனையின் பெருமை
இங்கே கற்பனைக்கு இடமில்லை
கூறுகின்ற அனைத்தும்
வாழ்வில் நடந்த உண்மை
புத்தக ஆசிரியரின்
தகப்பனாரும் ஓர் எழுத்தாளர்
பன்னூல் ஆசிரியர் - ஒரு சகோதரியும்
ஆசிரியர் பணியாற்றி
ஓய்வு பெற்ற எழுத்தாளர்
ஒரு சகோதரரும் எழுத்தாளர்
தமிழிலும், ஆங்கிலத்திலும்
புலமை பெற்றவர்..
இவரின் கவிதை புத்தகங்கள்
கல்லூரியில் பாடப்புத்தகமாக
அங்கீகரிக்கப் பட்டிருப்பது
அவரின் எழுத்துக்கான அங்கீகாரம்..
பெண்ணின் பருவங்கள் ஏழு
பேதை, பெதும்பை,மங்கை, மடந்தை,
அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என
பெண்ணின் பருவங்கள் ஏழு -இதில்
தாய்மைக்கு என்றும் இல்லை ஈடு
அளவில்லா பாசத்தை
அள்ளித் தெளிப்பது
தாய்மையின் சிறப்பு
என்றென்றும் நீங்காதது
தாய்மையின் பூரிப்பு
படிக்காத தாய் தனது
ஆறு பிள்ளைகளையும்
ஆண்களையும் , பெண்களையும்
சமமாய் பாவித்து வளர்த்தது சாதனை
ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தலைக்குமாம்
பாரதி சொன்னதை அவர்
உள் வாங்கியிருந்தது சாதனை
கல்வியில்லா பெண்கள் களர் நிலம்
அந்நிலத்திலே புல் விளைந்திடலாம்
நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை
கல்வி அறிவுடைய பெண்கள்
திருந்திய கழனி
அங்கே நல்லறிவுடைய மக்கள்
விளைவது பற்றி நவிலவோ நான்
பாவேந்தன் பாரதிதாசன் கவிதை வரிகள்..
பாவேந்தனை அவர் படிக்கவில்லை
ஆனால் அவர் கூறிய கருத்துக்களை
தான் படிக்காது இருந்தும்
கல்வியின் அவசியத்தை
உணர்ந்து இருந்தது சாதனை
பெண்கள் உயர்கல்வி கற்பதும்,
வேலைக்கு செல்வதும்
இஸ்லாமிய மார்க்கத்தில்
இன்னலுற்ற காலத்தில்
பெண்கள் அனைவரையும்
பட்டம் பெற வைத்தது சாதனை .
அரசு வேலைக்கு அவர்களை
தயார் படுத்தியதும் சாதனை
சோதனை காலங்களில் பெண்கள்
தன் காலில் சுயமாய் நிற்க
பட்டப் படிப்போடு
B. Ed படிப்பும் கூடுதலாய்
உதவும் என்பதை
வருமுன்னர் உணர்ந்து
உற்சாகமூட்டி அதை
படிக்கச் செய்தது சாதனை
மனைத்தக்க மாண்புடையளாகி தற்கொண்டான்
வளத்தக்கால் வாழ்க்கைத் துணை
என்ற வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப
சூழலை உணர்ந்து
கணவரின் வருமானத்துக்கு ஏற்ப
குறைந்த வருமானத்தில் கட்டு செட்டாய்
குடும்பம் நடத்தியது சாதனை
பிள்ளைகளின் படிப்புக்காகவே
சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி
இடம் பெயர்ந்து முன்னேற
முயற்சித்தது சாதனை
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை
மண்ணுயிர்க்கெல்லாம் இனிது
எதையும் எண்ணுவது எளிது
செயல்படுத்துவது அரிது
செயல்படுத்தி காட்டிய தாயை
உயர வைத்து அழகு பார்த்த தாயை
பெற்ற மக்கள் பூரிக்கின்றார்
அவர் பெருமையை பறைசாற்றுகின்றார்
உற்றவர் உடனிருந்து வாழ்த்துகின்றார்
வாழ்வில் நடந்த சம்பவங்கள் வரலாறு ஆகும்
படைப்பாற்றலால் அதை புத்தகம் ஆக்கினால்
பலருக்கு அது வழிகாட்டியாகும்..
மிகப்பெரிய உயரங்கள்
மட்டுமல்ல சாதனை
மனதை தொட்டு மகிழ்வை தந்த
வளர்ச்சிக்கு வித்திட்ட
நிகழ்வுகளும் சாதனை தான்
உயரம் தொட்டவருக்கு வாழ்த்துக்கள்
அதை வெளிக்காட்டி மகிழ்பவரின்
எழுத்துப் பணி சிறக்க
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..