மனதின் வெளிப்பாடு


Saturday, 5 April 2025


 ஓய்வே... எனக்கு எதற்கு?

 கண்ணீரில்... கரையாதே 

  சமூகப் பணிகள் நிறைய இருக்கு

  உனக்காகவே காத்திருக்கு....


 பணிகள் முடித்து வந்த துறைகள்

 அதில் சிறப்பை கூட்டும் உன்  பணிகள்

 என்றென்றும் உன் பேரைச் சொல்லும்

  எண்ணத்தில் என்றென்றும் தங்கும் 

உயர்வாகவே நாம்  வாழுவோம்...


 வயது ஆட்கொண்டது

 ஓய்வை பணி தந்தது 

பிணியை யார் தந்தது? 

அதன் வரவை யார் வெல்வது?

வயதானால் தோற்றத்தில் மாற்றம்

 உள்ளத்தில் கூடாது  வாட்டம்

 உயர்வாகவே நாம் வாழுவோம்


நட்பு சிறக்கின்றது

 நன்மை கிடைக்கின்றது 

வாரிசு விரும்பாதது- நாம் 

வழிகாட்ட முன் நிற்பது

 நாம் பெற்ற பிள்ளைகள் இன்று

 வாழட்டும் அதன் போக்கில் நன்று

 உயர்வாகவே நாம் வாழுவோம்




Wednesday, 26 March 2025

 இனிய தரம் செய்து பாருங்கள்

 பொருள் விற்பனையில்  தேங்குவதில்லை

 பெருமையுடன் நிமிர்ந்து நில்லுங்கள்

 தரம் படைப்பவர்கள் வீழ்வது இல்லை

   ( இனிய தரம்....)

 அள்ள அள்ள குறையாத  ஆற்றல் பெற்றது

 ஈடு இணை இல்லாத சிறப்பை பெற்றது

செய்யும் தொழில் சிறக்க வழி வகுக்கின்றது

 உலகம் எங்கும் பரவியது ஜொலிக்கின்றது

 ( இனிய தரம்....)

 ஆர்வமுடன் உழைப்பவருக்கு அள்ளித்  தருகுது

 அல்லல் துன்பம் துயரங்களை தள்ளி நிறுத்துது

 பெயரைச் சொல்லி பொருளை கேட்கும் பெருமை படைக்குது 

அந்த பெருமையோடு உலகைச் சுற்றி உயர்ந்து  நிற்குது

 இழப்பு கண்டு மாந்தர்களே தளராதீர்கள்

 தரத்தை கூட்டும் யுக்திகளை கையில் எடுங்கள்

 அதன் இடத்தில் குறை அனைத்தும் சுட்டிக்காட்டுங்கள்

 தரம் சிறந்து  தொழிலினிலே வெற்றி பெறுங்கள்

 ( இனிய தரம்....)

 புத்தாக்கம் என்பதெல்லாம் புதுமை செய்வது 

செய்யச் செய்ய தொழிலும் மிக விருத்தி ஆகுது

 யோசனைகள் அனைவருக்கும் பொதுவானது

 நல் யோசனைகள்  குவிவது தான்  சிறப்பாகுது

  பிழைகளற்ற செயல்கள் என்று ஏதுமில்லை

 பிழைகள் எல்லாம் தொடர்வது தான் பெரிய தொல்லை

 அதை தவிர்க்கும் வழிமுறைதான் தரத்தின்  எல்லை

 இதை உணர்ந்தால் வெற்றி என்றும் குறைவதில்லை

 ( இனிய தரம்....)



Saturday, 22 March 2025

 தரம் எங்கே? எங்கே? தேடிப் பார்க்கும் உலகிலே 

பொருள் தரம் இருந்தால் விற்க விற்க  தடையில்லே

 அதன் உயர்வைக் கூட்ட  உறுதி எடு மனதிலே

 தரம் இன்னும் இன்னும் நிறைய வேணும் பணியிலே

 தரம் இல்லை இல்லை தோல்வி தானே   தொழிலிலே


 தரம் தன்னால தான் வந்தா 

தொழில் எல்லோருக்கும் ஒண்ணா

 தரம் நம்மால் தான் வந்தா

 நாம எல்லோருக்கும்  முன்னா


 அந்த ஒத்த வார்த்தை சொன்னா

 பொருள் விற்கும் விற்கும் (Gunna)

 அது இல்லாமல் தான் நின்னா 

 தொழில் ஆகி போகும் மண்ணா(2)

(தரம் எங்கே? எங்கே...)

 அடங்கா குதிரையைப் போல

 இருந்தன இழப்பு எல்லாமே

 ஒரு பூதம் போல, பூதம் போல துரத்தி வந்ததே

 படுத்தால் தூக்கமும் இல்லை

 தொழிலில்  பல பல தொல்ல

 அந்த தொல்லையால,  தொல்லையால  பூரிப்பு இல்லை

  குழுவாய் நாங்க இணைய

 பெரிதாய் இழப்பு குறைய

  தர வட்டம் கண்ட வெற்றி கண்டு ஆர்பரித்தோமே


 இழப்ப மனசுல  தேக்கி

குழுவாய் இணைஞ்சே போக்கி

 இன்னும்  கூட்டுறோம் தரத்தை

  தடையாய் எதுவும் வந்தாலும்

 தடையாய் எதுவும் வந்தாலும்

  தடையாய் எதுவும் வந்தாலும்

(தரம் எங்கே? எங்கே...)

 இழப்போ ராட்சசன் தாண்டா

 தினமும் வருகுது  ஜோரா

 அது மேல கீழ, மேல கீழ புரட்டுது  தோடா

 பல நாள் உச்சத்தில் இருந்து 

சில நாள் பொத்துன்னு விழுந்தா

 அந்த தோல்வியால தோல்வியால

 தரத்துல குறைஞ்சா..

 யாரும் கூடவே வாரார்

 வந்தவர் பாதியில் போவார் 

அவரை தக்க வைக்க அவரு நம்ம 

சொந்தம் இல்லையே.....


 தரத்த வெகுவாய் உயர்த்தி

 இழப்பை தடுத்தே நிறுத்தி

 ஜோரா பயணத்தை கெளப்பி

 உலகை வலம் வருவோமே 

உலகை வலம் வருவோமே 

உலகை வலம் வருவோமே

(தரம் எங்கே? எங்கே...)

Sunday, 5 January 2025

மீண்டும் இணைவோம்

 தாய்க்கு தலை மகனாய்

 அருள் ஆனந்தர் கல்லூரியின்

 வேதியியல் துறையின் முதல்  பிரிவாய்

 பயிலும் வாய்ப்பை பெற்றோம்

 இனிதாய் அதனை கற்றோம்..


  முப்பது பேராய் இணைந்தோம்

 மூன்றாண்டு பயணம் தொடர்ந்தோம்

 இளங்கலை பட்டம் பெற்றோம்..


 அருளை ஆனந்தமாய் வழங்கிய

 கல்லூரிக்கும்,  ஆசான்களுக்கும்

 அகம் நிறைந்த  நன்றிகளோடு

 அவரவர் பாதையில் தொடர்ந்தோம்..


 ஆண்டுகள் உருண்டோடியது

 பாதைகள் பலவாகியது

 படித்தது போதும் என்று

 பணிக்கு சிலர் சென்றோம்

 சுய தொழிலில் முன்னேறும்

 சூட்சுமத்தை சிலர் கற்றோம்

 இன்னும் படித்தால் சிறப்பென்று

 இயன்றவரை சிலர் படித்தோம்

 தகுதியை மெருகூட்டி

 தனக்கான பாதையை வளமாக்கி

 உள்நாட்டிலும், அயல் நாட்டிலும்

 பணி செய்யும் வாய்ப்பு பெற்றோம்

 எல்லோரும் இன்புற்றோம்...


 குடும்பம் மனைவி மக்கள் என்று

  குதூகலித்து மகிழ்ந்தோம்

 பிள்ளைகளைப் பார்த்து ரசித்தோம்

 பார்த்து, பார்த்து பராமரித்தோம்

 அல்லும் பகலும் உழைத்து

 அதற்கான பயணம் தொடர்ந்தோம்

 தந்தையாய் கடமை செய்தோம்

 தாத்தாவாய்  உயர்வு பெற்றோம்

 நிறைவான மகிழ்வு பெற்றோம்..


 வாழ்க்கைப் பாதையில்

 பல மேடு பள்ளங்கள்

 அத்தனையும் கடந்தோம்

 கொரோனா அலையில் தப்பித்தோம்

 இறைவனுக்கு நன்றி...


 அரசின் ஆணைப்படி

 பணி ஓய்வு பெற்றோம்

 பணியின்  மேன்மையால்

 ஆலோசகராய் சிலர் பணியாற்றுகிறோம்

 பொருளுக்காய் அல்ல

  சுறுசுறுப்பாய் இயங்க..

  இயக்கம் இன்றியமையாதது

 ஓடிக்கொண்டிருக்கும் நீரில் தான்

 ஆக்சிஜன் அதிகம்..


 சுய தொழிலில் ஓய்வில்லை

 தொடர்ந்திட யாதொரு  தடையில்லை

 நம்மில் சிலரோ  இன்றில்லை

 இறைவன் தீர்ப்பில் மறுப்பில்லை

 இணையும் நட்பில்  பேதமில்லை

 இணைக்கும் காலம்  தூரமில்லை..

Monday, 24 October 2022

இல்லம் தேடி வருகிறோம்


எங்களிடம் இருப்பதெல்லாம்

எங்களுக்கு சொந்தம் இல்லை

ஆணையை ஏற்று நடக்கிறோம்

சிறந்த எடுத்துக்காட்டாய்

தினந்தோறும்... 


எங்களிடம் இருப்பதை

இல்லாதவர்களுக்கு கொடுக்க

எங்களால் முடியாது

அவரவர்களுக்கு உரியதை

அவரவர்களிடம்

ஒப்படைத்து மகிழ்கிறோம்... 


வாகனமும், அலைபேசியும்

எங்கள் வழித்துணை மட்டுமல்ல

வாழ்க்கைத் துணை.... 


அலைபேசி பயன்பாட்டில்

நாங்கள் முக்கிய அங்கம்

அலைபேசியில் ஆரம்பித்து

அதனாலேயே தொடர்கிறது

எங்கள் பயணம்.... 


எங்களுக்கென்று அடையாளம் உண்டு

௭ங்களின் அடையாளத்தை வைத்து

எங்களை உபயோகப்படுத்துகிறார்கள்... 


உங்களுக்கான தேடல்கள்

எங்களுடையது ஆகும்போது

எங்களுக்கு மகிழ்ச்சி.... 


எங்கள் சிக்னல் எப்போது வரும்?

காத்திருக்கிறோம் நாங்கள்

சிக்னலுக்காக காத்திருந்து

பல சிக்னல்களை கடந்து

பயணிக்கிறோம் நாங்கள்.... 


பல மேடு பள்ளங்களை

அன்றாடம் கடக்கிறோம்

வாழ்க்கை சீரானது அல்ல

சிக்கல்கள் நிறைந்தது

மேடு பள்ளங்களை உள்ளடக்கியது

உணர்கிறோம் நாங்கள்.... 


கொட்டும் மழையிலும்

சுட்டெரிக்கும் வெயிலிலும்

தொடர்ந்து பயணிக்கிறோம்

உழைப்பின் உயர்வை உணருகிறோம்.... 


நிகழ்காலத்தின்

நிஜத்தை புரிந்து கொண்டு

நாங்கள் பெற்ற

பட்டம் மறந்து பயணிக்கிறோம்

எங்களுக்கான தேவைகளை

பூர்த்தி செய்ய...


உங்களுக்கான தேவைகள் மட்டுமல்ல

எங்களுக்கான தேடல்கள்...


ஆயிரம் கனவுகளோடு

அன்றாடம் பயணிக்கிறோம்

அட்சய பாத்திரமான

எங்கள் பைகளில்

உங்களுக்கான உணவுகளைச்

சுமந்துகொண்டு...

உங்கள் இல்லம் தேடி வருகிறோம்.




Thursday, 20 October 2022

நீ சாதிக்க பிறந்தவன்


புதிய உத்வேகத்தோடு புறப்படு

புதுமைகள் செய்யும் நோக்கோடு

விதைக்கிற விதை தான் முளைக்கும்

வீரியமும் கவனமும்

காரியத்தின் அனுகூலங்கள்


எண்ணி எண்ணி

ஆனந்திப்பது சுலபம்

எது வந்தாலும் 

சாதிப்பது கடினம்


கற்பனைக்கோட்டை

எல்லையின்றி விரியும்

காணிநிலம் நிஜம் என்றால்

அடையும் கடினம் புரியும்


நிழல்களின் அடையாளத்தில்

நிஜங்களை தொலைக்காதே

வீணான கற்பனையில்

காலத்தை நகர்த்தாதே


மணமில்லா மலர்

மணம் பரப்புமா?

திறன் இல்லாத தொழில்

மனம் கவருமா?


உளியின் கூர்மை

பாறையைப் பிளக்கும்

உள்ளத்தின் கூர்மை

வெற்றியைக் குவிக்கும்


பத்தோடு பதினொன்றாய்

வாழ்ந்தது போதும்

பதிவுகள் உன்னால் என்று

வாழ்த்தட்டும் தேசம்


சரியான பார்வை

சரியான தீர்வு

முறையான வாழ்வே

முன்னேற்றத்தின் சுவடு


உன்னை அறி முதலில்

உயரும் வழி எதிரில்

மாற்றம் தானே நிரந்தரம்

தோல்வி எப்படி தினம் வரும்?


உன்னுள் மனமாற்றம்

உயர்வுக்கு வழிகாட்டும்

தடுமாற்றம் தோல்வி தகரும்

நீ முயன்றால் எதுவும் முடியும்.


Wednesday, 19 October 2022

ஆன்லைன் விளையாட்டும் சூதாட்டமும்


ஆபத்தை விளைவிக்கும் அனேக விஷயங்களில்

ஆன்லைன் சூதாட்டமும் ஆபத்தானது

ஆசைகாட்டி அடிமைப்படுத்துகிறது

அடிமைப்படுத்தி உயிரைப் பறிக்கிறது.


இளைய சமுதாயத்தின்

கற்கும் திறனை குறைக்கிறது

கவனச் சிதைவுக்கு காரணமாகிறது

கண்களில் குறைபாடு உண்டாகிறது

உடல்நலனில் சேதாரம் விளைவிக்கிறது

மனநலம் பரிதவித்து நிற்கிறது

படைப்பாற்றல் பாழ்பட்டுப் போகிறது

கோபமோ உச்சியைத் தொடுகிறது

கண்ணியம் காற்றில் பறக்கிறது

கவலையின்றி கண்டபடி சுற்ற வைக்கிறது

ஆசை கொண்ட மனிதனின்

பொருளாதாரத்தை சுரண்டுகிறது

சமூக ஒழுக்கத்தைப் பாழ்படுத்துகிறது

தற்கொலைக்கு தூண்டுகிறது 

குடும்பத்தை சீரழிக்கிறது.


ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க

அவ்வப்போது குரல் ஒலித்தாலும் 

ஒழிப்பதற்கான மசோதா சட்டசபையில் நேற்று

மகிழ்ச்சியுடன் அரங்கேறியது

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் கட்டுப்பாட்டில் புதிதாய் இயங்கப் போகிறது

சூதாட்டம் தவிர்த்த ஆன்லைன் விளையாட்டுகளை ஆணையம்

ஒழுங்குபடுத்த போகிறது

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு

தண்டனை கடுமையாக்கப் பட்டுள்ளது

நல்ல செய்தி தான், மகிழ்ச்சிதான் 


மனதின் ஆழத்தில் ஒரு குரல்

'குடி' என்னும் அரக்கனை ஒழிக்க

அரசு எப்போது முன் வரப்போகிறது?

நிதிநிலை காரணமாய் இருக்கலாம் என்றாலும்

படிப்படியாய் 'குடி'யை குறைப்பதற்கு

முயற்சிகள் செய்யலாமே...?