தாய்க்கு தலை மகனாய்
அருள் ஆனந்தர் கல்லூரியின்
வேதியியல் துறையின் முதல் பிரிவாய்
பயிலும் வாய்ப்பை பெற்றோம்
இனிதாய் அதனை கற்றோம்..
முப்பது பேராய் இணைந்தோம்
மூன்றாண்டு பயணம் தொடர்ந்தோம்
இளங்கலை பட்டம் பெற்றோம்..
அருளை ஆனந்தமாய் வழங்கிய
கல்லூரிக்கும், ஆசான்களுக்கும்
அகம் நிறைந்த நன்றிகளோடு
அவரவர் பாதையில் தொடர்ந்தோம்..
ஆண்டுகள் உருண்டோடியது
பாதைகள் பலவாகியது
படித்தது போதும் என்று
பணிக்கு சிலர் சென்றோம்
சுய தொழிலில் முன்னேறும்
சூட்சுமத்தை சிலர் கற்றோம்
இன்னும் படித்தால் சிறப்பென்று
இயன்றவரை சிலர் படித்தோம்
தகுதியை மெருகூட்டி
தனக்கான பாதையை வளமாக்கி
உள்நாட்டிலும், அயல் நாட்டிலும்
பணி செய்யும் வாய்ப்பு பெற்றோம்
எல்லோரும் இன்புற்றோம்...
குடும்பம் மனைவி மக்கள் என்று
குதூகலித்து மகிழ்ந்தோம்
பிள்ளைகளைப் பார்த்து ரசித்தோம்
பார்த்து, பார்த்து பராமரித்தோம்
அல்லும் பகலும் உழைத்து
அதற்கான பயணம் தொடர்ந்தோம்
தந்தையாய் கடமை செய்தோம்
தாத்தாவாய் உயர்வு பெற்றோம்
நிறைவான மகிழ்வு பெற்றோம்..
வாழ்க்கைப் பாதையில்
பல மேடு பள்ளங்கள்
அத்தனையும் கடந்தோம்
கொரோனா அலையில் தப்பித்தோம்
இறைவனுக்கு நன்றி...
அரசின் ஆணைப்படி
பணி ஓய்வு பெற்றோம்
பணியின் மேன்மையால்
ஆலோசகராய் சிலர் பணியாற்றுகிறோம்
பொருளுக்காய் அல்ல
சுறுசுறுப்பாய் இயங்க..
இயக்கம் இன்றியமையாதது
ஓடிக்கொண்டிருக்கும் நீரில் தான்
ஆக்சிஜன் அதிகம்..
சுய தொழிலில் ஓய்வில்லை
தொடர்ந்திட யாதொரு தடையில்லை
நம்மில் சிலரோ இன்றில்லை
இறைவன் தீர்ப்பில் மறுப்பில்லை
இணையும் நட்பில் பேதமில்லை
இணைக்கும் காலம் தூரமில்லை..
No comments:
Post a Comment