மனதின் வெளிப்பாடு


Thursday, 2 September 2021

தொழிலை சிறப்பிக்கும் TOC

தொழிலை சிறப்பிக்கும் TOC

இழப்பை சிதறடிக்கும் இணைய தளம் காணுங்கள் 

இணைத்துச் சிறகடிக்கும் இனியதரம் பாருங்கள் 

இயல்பாய் சிறந்திருக்க வழி என்ன கேளுங்கள் 

இனிதாய் சிரித்திருக்க TOC யை நாடுங்கள் 

TOC - THEORY OF CONSTRAINTS 

இழப்பை இனம் கண்டு அழிக்கின்ற வழி

இன்னும் தொழிலை சிறப்பிக்கும் வழி 

உழைப்பை முறைப்படுத்தி 

வாடிக்கையாளருடனான இணைப்பை 

பலப்படுத்தும் மிகச் சிறந்த வழி.


சந்தையின் வகை இரண்டு

விற்பவர் சந்தை,வாங்குபவர் சந்தை 

விற்பவர் ஆதிக்கம் அதிகமானால் 

அது விற்பவர் சந்தை.

பொருள் பெறுபவர்,ஆதிக்கம் அதிகமானால் 

அது வாங்குபவர் சந்தை.

உலகமயமாக்கலால்  

உருவான போட்டியால் 

வாடிக்கையாளர்கள் சந்தையே 

உலகில் வலம் வருகின்றது 

வாடிக்கையாளர் மனநிறைவையே

அது பெரிதும் எதிர்பார்க்கிறது.


தேவையான பொருள், தேவையான நேரத்தில்

முழுமையான தரத்தில்,

வாடிக்கையாளரை சென்றடைவது தரம்.

காலம் தாமதமானால் காலாவதியாகிவிடும் 

அந்த ஆர்டரின் நிரந்தரம் 


உரிய பொருளை உரிய நேரத்தில்

செய்யச் சொல்வது TOC

ஆர்டரை எதிர்பார்த்து 

பொருளை செய்து குவிப்பது இழப்பு.

அதனால் ஏற்படும் 

பணச்சுழற்சியில் தவிப்பு

சூழலை உணர்வது பொறுப்பு

உணர்ந்து செயல்படத்தூண்டுவதே 

TOC யின் பிரதிபலிப்பு.


நமது ஆர்டரின் அன்றாட தேவையை 

கலர் கலராய் தரம் பிரிக்கின்றது.

கருப்பு , சிகப்பு, மஞ்சள்

பச்சை, வெள்ளை என 

வரிசைப்படுத்தி, வண்ணம் தீட்டி

நம் எண்ணத்தில் பதிக்கிறது.

கருப்பை முன்னிலைப்படுத்தி

 மிக விரைவாய்

செயல்புரிய தூண்டுகிறது.

கருப்பு, சிகப்பு முதல்ல பார் 

பச்சையும், மஞ்சளும், பதறாம பார்

வாடிக்கையாளர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்

தொழில் இன்னும் சிறப்பதைப் பார்.


TOC வழக்கமான நடைமுறையிலிருந்து 

சிறிது மாறுபடும்

சற்று கசப்பான மருந்து.

அருந்தினால் புசிக்கலாம் அறுசுவை விருந்து

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட

மிகச்சரியான நடவடிக்கை TOC.


கிரிக்கட்டில் சரியக்கூடாது விக்கட்டு

தொழிலில் சரியக்கூடாது மார்கெட்டு

அதுக்காக உழைக்கணும் மெனக்கெட்டு

TOC அதுக்கான படிக்கட்டு.


வாடிக்கையாளரை வசமாக்குவோம்

வாழ்க்கையை வளமாக்குவோம்

TOC யை ஆயுதமாக்குவோம்

தொழிலை ஆனந்தமாக்குவோம்.

(நிறுவனத்தில் பணிபுரிந்த போது TOC செயல்பாட்டை 
ஆரம்பிக்கும் போது எழுதியது.)

Monday, 16 December 2019

மத நல்லிணக்கம்



மத நல்லிணக்கம்
மேடையில் மட்டுமல்ல
மேன்மை பெற்றவர்களின்
மனங்களில் நுழைவதால்
மகிழ்ச்சி பெறுகிறது.

Friday, 13 December 2019

பக்கங்கள் எங்கே?


வாழ்க்கைப் புத்தகத்தின்
இருபக்க அட்டைகளாய்
நானும் அவளும்
இணைபிரியாமல்
ஒட்டிக் கொண்டிருக்கிறோம்..

ஆசையாய் எழுதி
அன்பாய் பிரசுரித்த
எங்கள் புத்தகத்தின்
பக்கங்கள் இன்றி...

எப்போதாவது மட்டும்
தெரிகின்றன
எங்கள் கண்களுக்கு
நாங்கள் எழுதிய பக்கங்கள்..

கண்களின் தடுமாற்றமா?
இல்லை வாழ்வியல் மாற்றம்.

அட்டையோடு ஒட்ட
ஆசைப் பட்டன பக்கங்கள்
அன்று...
பக்கங்களோடு ஒட்ட
ஆசைப்படுகின்றன அட்டைகள்
இன்று...

பக்கங்கள் இல்லாத அட்டைகள்
உபயோகமற்றதாய்
ஆகிவிடுகின்றது
எடைக்கு கூட
எடுப்பதில்லை எவரும்...

ஒரு பக்கம் எழுதினாலும்
பக்கம் பக்கமாய் எழுதினாலும்
கழன்று விடுகின்றன
பக்கங்கள்..

சாந்தமாய் எழுதினாலும்
சாட்டை கொண்டு எழுதினாலும்
அட்டையோடு ஒட்ட
சங்கடப் படவே செய்கின்றன
பக்கங்கள்..

அன்றாட தேடலில்
அவரவர் குடும்பமே சுமையாக..
யாரும் தூக்கிச் சுமக்க
நினைப்பதில்லை அட்டைகளை..

பால் ஊட்டினேன்
சீராட்டினேன்
மார்பில் புதைத்தேன்
பேசிப் பயனில்லை

பக்கங்கள் வாதிடுகின்றன
எல்லாம் கடமை என்று...

உன்னிடம் இருப்பதென்ன?
உன்னால் ஆவதென்ன?
பணியின்போது கேட்டார்கள்
பணி செய்ய..
பிணியின்போது அவர்கள்
பார்வை பறைசாற்றுகிறது
அந்தக் கேள்விகளை...

முதுமைக் காலத்தில்
உடலும் ஒத்துழைப்பதில்லை
உறவும் ஒத்துழைப்பதில்லை
பணம் இல்லாவிட்டால்
வாழ்வே பெரும் தொல்லை..

எங்களைப்போன்ற நட்புகள்
துணையோடு
அவளுக்கு நானும்
எனக்கு அவளும்
புத்தகத்தின் அட்டைகளாய்
கடைசிவரை
வாழ்ந்து விட்டுப் போகிறோம்...

தனித்துவிடப்பட்டு
தவித்து நிற்கும் பலரை விட
நாம் மேல் என்ற சமாதானத்துடன்






Wednesday, 11 December 2019

மனம் கவர்ந்த கவிஞன்


ஒத்த கருத்தோடு
ஒட்டி வாழ்வது
சமூகத்தில் எளிது.

மாற்றுக் கருத்தை
உற்ற கருத்தாய்
உருமாற்ற நினைப்பது
அவனியில் என்றும் பெரிது.

உற்ற கருத்தை
துணிந்து ஒலித்தவன் நீ...
மக்கள் நலம் வாழும்
மாற்றுக் கருத்தை
அவனியில் விதைத்தவன் நீ...

மண்ணில் மறைந்து
ஆண்டுகள் பல ஆனாலும்
அப்பா என்றதும்
பலசமயம்
நினைவில் வருகிறது உன் பா
ரதிஅழகின் உச்சம்
பாரதி பாட்டின் உச்சம்..

ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை பூமியில்
சமதர்மத்தை காட்டினாய்
இழிவு கொண்ட மனிதர்
இந்தியாவில் இல்லை என்று
சாதி மத பேதத்தை வெறுத்தாய்..

உயிர்கள் அனைத்தும் ஒன்று
உலகிற்கு உவமை காட்டினாய்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற
உயர்ஜாதி கவிஞன் நீ
பிறப்பால் அல்ல பாட்டால்....

சுடர்மிகும் அறிவுடன்
சிவசக்தியை கூப்பிட்டு
உன் நலம் கேட்கவில்லை
ஊராரின் நலம் வேண்டுமென்றாய்..

வறுமையை உனது ஆக்கினாய்
பாட்டை இனிமையாக்கினாய் விடுதலை எழுச்சியை உருவாக்கினாய்
மக்கள் வீறுகொண்டு எழச்செய்தாய்

நேர்கொண்ட பார்வை உமது
சிந்தனைத் தடுமாற்றங்களோ எமது
உதற மாட்டோம் உன் நினைவை
நெஞ்சில் நிறைந்த கவிஞனே..

பலமான பாலம்

வீரம் வெளஞ்ச மண்ணு
எங்க மண்ணு
உள்ளம் பறிகொடுக்க
ஏத்த மண்ணு
சொன்ன வார்த்தையில் பத்தாது
வாழ்ந்தால் நெஞ்ச விட்டு போகாது

வைகையிலே
கால் வைக்கையிலே
மனம் துள்ளும்
நெஞ்சை அள்ளும்..

அழகர் வந்திடுவார் குதிரையிலே
கூட்டம் எல்லாம் கூடிடுமே மதுரையிலே
சொக்கர் மீனாட்சி கல்யாணம்
பார்த்து ரசித்திருக்கு பலகாலம்
மதுரை வைகை ஏவி பாலம்
நின்று சிறக்கட்டும் ஆயுள்காலம்.


அந்த ஒரு நொடிக்காக



இதயம் நின்ற நொடிகளில
இது உதவும்
இதயம் மீண்டும் துடிக்க...

எது உதவும்?
இதயம் துடிதுடிக்கச்
செய்பவளின்
நினைவில் சிறக்க..

நொடி போதும்
அவள்
மூளையில் மின்சாரம் பாய்ச்ச

அந்த ஒரு நொடி
காத்துக் கிடக்கின்றது
வருடக்கணக்காக...
ஒருதலைக் காதலாய்..

Tuesday, 10 December 2019

நீ இன்றி வாழ?


ஓயாத இருமலால்
அவதியுறுகிறேன்
நெடுநாட்களாக....

கற்பூரத்தை
கனலில் காட்டி
மார்பில் தேய்த்தால்
சளி குறையுமாம்
வழி சொன்னார்கள்...

மனதில் பதிந்த
என்னவள்
சூடு தாங்காமல்
தவிப்பாளென்ற
வலி புரியாமல்.....

தூதுவளை சாப்பிட்டால்
மிக நல்லதாம்
சொன்னார்கள்
எனக்கான தூது
அவள்தான் என்று
அறிந்துகொள்ளாமல்....

வெற்றிலைச்சாறு நல்லதாம்
குடிக்கச் சொன்னார்கள்

வெற்றிலை தட்டு ஏந்தி
அவள் இல்லம் சென்று
நிச்சயிக்க மறுத்துவிட்டு...

ஓமம் நல்லதாம்
சொன்னார்கள்
ஹோமம் வளர்த்து
அவள் கரம்பற்றி
என்னிடம் ஒப்படைக்க
மனமின்றி...

மருத்துவரை நாடினார்கள்
மருந்தை
தவறாமல் தந்தார்கள்.

அவளை
மணமுடித்து தர
மனமின்றி...

மருந்தை
உண்டு செரித்தால் தானே
பலனளிக்கும்
மென்று துப்பினால்?

வலி குறைய வழியின்றி
சளி குறைய வாய்ப்பில்லை
எப்படி புரிய வைப்பேன்?

சளி முற்றினால்
காசம் வருமாம்
சொன்னார்கள்...

சுவாசம்
புறம்தள்ளி
மண்ணில் வாசம்
எப்படி சாத்தியம்?
என் சுவாசமே
அவள்தான் என்று
அறியாமல் பேசுகிறார்கள்...

நான் இருமுவது கண்டு
பொருமுகிறார்கள்
அவளை வெறுத்து...

ஓயாது இருமுகிறேன்
ஒவ்வொரு முறை
இருமும் போதும்
அவள் பெயரை உச்சரிக்கிறேன்..

என் உயிரில் கலந்த
அவள் பெயரை
உச்சரிப்பதால்
அடிக்கடி
தொடர்ந்து இருமுகிறேன்
என்னையும் மீறி....