மனதின் வெளிப்பாடு


Wednesday, 15 October 2025

நிறையும்..குறையும்..


 "அளவான குடும்பம் 

வளமான வாழ்வு"

 அரசின்   அறிவிப்பால் 

 குடும்பம்  சிறிதானது

 வாழ்க்கை தரம் உயர்வானது

பிறப்பு விகிதம்  குறைந்தது

 இறப்பு விகிதம் சரிந்தது

 இளைஞர்கள் எண்ணிக்கை   குறைந்தது

 முதியோர்கள் எண்ணிக்கை   உயர்ந்தது

 உழைப்பவர்கள் எண்ணிக்கை  குறைகிறது

 உழைப்பற்றோர் எண்ணிக்கை  உயர்கிறது


 அரசு யோசிக்கிறது 

 மக்கள் தொகை  கணக்கீட்டின்படி

 மத்திய அரசு தரும் நிதி குறையலாம்

 மக்களவையின் பிரதிநிதித்துவமும் குறையலாம்.


 சாதித்தது  தமிழ்நாடு என்று

 மார்தட்டி மகிழ்ச்சி பெற்ற நாம்

 சூழலை உணர்ந்து சிந்திப்போம்

 மாற்றம் காண யோசிப்போம்

அரசின் முயற்சிக்கு தோள் கொடுப்போம்.

திருமண வாழ்த்து

❤️

அகிலம் யாவையும் அழகுற ஆக்கி 
அருள் பாலிக்கும் அருட்கொடையாளன்
எல்லாம் வல்ல இறைவனின் அருளால்
அறிவிற் சிறந்த பெரியோர் மற்றும் 
சுற்றமும் நட்பும் சூழவிருக்கும் 
இம்மண மன்றலில் மகிழ்வுடன் திகழும்
                                         மணமக்களுக்கு 
அளிக்கின்றேன் அறிவுரை அன்புடன் ஏற்க.


இல்லற மல்லது நல்லற மன்றென
இயம்பினார் அவ்வை ரத்தினச் சுருக்காய்
அறனெனப்பட்டதே இல்லற வாழ்வென 
அடித்துச் சொன்னார் வள்ளுவர் தானும்

நல்லறங்க ளாற்றி கனவேள்வி நடத்திடனும்
இல்லறத்திற் கிணையாமோ இவையெலாம் 
என விளித்தான் பெரும் புலவன் பிசிராந்தை

இல்லற வாழ்வை ஏற்காதிருப்போன்
என் வழிச்சாரான் எனவே கூறி 
இல்லற வாழ்வை வலியுறுத் திட்டார்
இஸ்லாம் தந்த மாநபி யவர்கள்...

நாடு போற்றும் நல்லறமாம் இல்லறத்தை
நடத்திடுதல் எளிதாமோ? நவிலக் கேட்போம்
கல்லும், முள்ளும், புதர்களும் நிறைந்த
காட்டுப்பாதை என்றனர் சில பேர் 
புயலில் சிக்கி கடலின் நடுவே 
நிற்கும் கலமென செப்பினர் சிலபேர்..

இல்லற வாழ்க்கை இனிதாய் அமைய
கவனம், பொறுப்பு மிகவும் தேவை 
என்பதைச் சொல்லவே இவ்வாறெல்லாம்
அச்சுறுத்திச் சென்றனர் அனுபவசாலிகள்

நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?
என்றிருந்த நீவீர் இன்று முதல்
நீ வேறா? நான் வேறோ? என இணைந்தீர்

புகைவண்டி செல்லும் பாதை யதற்கு
தண்டவாளங்கள் இரு பக்கம் எனினும் 
தடம் என்பது ஒன்றை அன்றோ 
பார்க்கும் விழிகள் இரண்டு எனினும்
பார்வை என்பது ஒன்றே அன்றோ..

அதுபோல் உடலால் நீங்கள் இருவர் எனினும்
ஓர் உயிராய் ஒன்றித்து வாழ்தல் வேண்டும்
கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர்
ஆடையாய் கருதி வாழச் சொல்லும்
அல்குர்ஆனின் அறவுறை ஏற்று 
உன்னுடைய மனைவி உன் உடம்பில் பாதி
 என்ற நம் நாயக நன்மொழி சார்ந்து
 மணமக்காள் நீவிர் மனமொத்து வாழ்ந்தால்
 இன்பமும் உண்டோ இதை விடப் பாரில்..

மணமகளே என் அனுபவம் கொண்டு
அறிவுரை சில கூற ஆசை கொண்டுள்ளேன் 
கதையோ கட்டுரை, கவிதைகள் எதுவோ
விறுவிறுப்பாகவோ, விருப்பமுள்ளதாகவோ
ஆக்கும் தன்மை ஆசிரியர் பொறுப்பு..

இல்லற வாழ்க்கை அழகுற அமைய
ஆக்கும் பொறுப்பு உன்னுடையது அறிவாய்
தாம்பத்தியம் என்ற வாழ்க்கையின் வண்டி
கட கட வெனவே ஒழுங்காய் ஓட 
அச்சாணி நீயே அறிவாய் பெண்ணே..

ஊனும் உயிரும் குடும்பம் என்றால் 
உயிராய் உள்ளது பெண்ணே 
உந்தன் பொறுப்பும் பெரிது அறிவாய் நன்று

பிறந்த வீட்டின் பெருமைகள் பேசாது 
புகுந்த வீட்டோடு ஒன்றி யிருந்து 
கண்ணியம் காத்தல் பெண்ணிற்கு அழகு
அதனால் பிறந்த வீட்டிற்கும் பெருமை

 இல்லற வாழ்க்கை இனிதே நடக்க
 பெண்ணின் பொறுப்பே பெரிதனக் கூறி
 மணமகன் அவருக்கும் ஒரு சில சொல்லி
 முடிக்கவிருக்கின்றேன் கவனம் கொள்வீர்.
 
ஓடும் ரயிலை ஒழுங்காய் நடத்த 
கைகாட்டி என்பது அவசியம் அதுபோல்
இல்லற வாழ்க்கை இனிதே நடக்க 
புலன்கள் அடக்கமாம் கைகாட்டி தேவை

பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் என்ற
பேதமை நீக்கி பெரும் பொறுப்பு அவர்க்கும்
உண்டென நினைத்து ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுக்கும் தன்மையோடும்
நேர்மை, நியாயம், வாக்கில் இனிமை 
அன்பு, ஆர்வம்,இடம்பெறச் செய்வீர்...

உலகம் உய்ய ஓர் வழி அன்பு 
அன்பு, அன்பு அன்பே இறைவன்
மணமக்காள்  நீவீர் அன்புடன் வாழ்ந்து
வளமுடன் வாரிசு மகிழவுடன் பெற்று 
கசடறக் கல்வியை கற்றிடச் செய்து
 
அதன்படி நின்று ஒழுகும் பண்பும்
பெற்றோர் விரும்பும் பிள்ளைகளாக 
உற்றார், உறவினர் உகப்புடன் ஏற்கும் 
மற்ற எவரும் குறை சொல்லாத 
நாடு போற்றும் நல்லவர்களாக 
நோய், நொடி இன்றி நன்னலத்தோடு 
வாழும் பிள்ளைகளாய் வளர்த்து
  
வாழ்க பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி
கல்லினுள் தேரைக்கும் கருப்பையுயிர்க்கும் 
உள்ளுணர்வு தந்து காக்கும் தயாளன் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி
 பாராட்டும் வாய்ப்பை வழங்கியமைக்கு 
 நன்றி பாராட்டுகிறேன்..

Monday, 13 October 2025

வாய்மையே வெல்லும்

வாய்மையே வெல்லும்
மனதில் பதிந்த வாசகம் 
மனிதனை மனிதனாக 
உருவாக்கும் சிறந்த வாசகம்..

பொய்மையைப் புறந்தள்ளி 
வாய்மையை வளர்த்தெடுக்க 
பாரினில் மனித இனம் 
மகிழ்வுடன் வாழ்ந்திருக்க
உண்மைக் கூற்றே உயர்ந்ததென்று
தமிழினம் வழங்கிய வாசகம் 
வாய்மையே வெல்லும்...

 நீதியை நிலைநாட்டும் 
அனைத்து நீதி அரசர்களின்
இருக்கையின் அருகில் 
பதிந்திருக்கும் வாசகம் 
வாய்மையே வெல்லும்..

கண்ணால் காண்பது பொய் என்றும் 
தீர விசாரிப்பதே மெய் என்றும் 
கண்ணை கட்டிக் கொண்ட 
நீதி தேவதையின் காலடியில் 
சாட்சிகள் அற்ற உண்மைகள்
சாகடிக்கப்படுகின்றன..

சம்திங் பெற்றுக் கொண்டு 
வளைந்து கொடுக்கிறது வாய்மை
சொல்வதெல்லாம் உண்மை என்று 
சத்தியம் செய்துவிட்டு 
பொய் சாட்சி சொல்வது
பலரின் வாடிக்கையாகிவிட்டது..

சிலரின் தேவைக்காக பலரை வதைப்பதும் 
வாதத் திறமையினால் உண்மையை 
குழி தோண்டி புதைப்பதும் 
வாய்மைக்கு வருத்தம் அளிக்கிறது..

உண்மையை பேசுபவர்கள் 
உயர்ந்த நிலை அடைய முடியாதென்று
உலகத்தார் பேசிக் கொள்வதும் 
அது உண்மைதான் என்று 
பெரும்பாலோர் நம்புவதும்
வாய்மையை யோசிக்க வைக்கிறது...

வக்கீல்களின் வாதத் திறமை 
வாய்மையற்ற  தீர்ப்புகளுக்கு
வழிவகுக்கின்றன..

தற்போதைய வாழும் சூழலில்
வாய்மையாளர்களும், 
நேர்மையாளர்களும் 
பாராட்டி கௌரவிக்கப்படுகிறார்கள்
அவ்வப்போது..

சாதனையாளர்கள் தானே
கவுரவிக்கப்படுவார்கள்?
வாய்மையும் நேர்மையும் 
கடைப்பிடிக்க வேண்டிய 
வாழ்வியல் முறையென்றுதானே
வழிகாட்டப்பட்டது?
சாதனை என்று எப்போது
அங்கீகரிக்கப்பட்டது?

வாய்மைக்கு உதாரணம் கேட்டால்
அரிச்சந்திரன் என்கிறோம்..
என்னைப் பொறுத்தவரை 
எல்லோரும் வாய்மையே பேசுகிறோம்
வாய்மைக்கு நான் என்று பதில் சொல்ல
எல்லோருக்கும் தயக்கம் 
தன்னிடம் வாய்மையில்லை என 
உள்ளதை தான் சொல்கிறோம் 
வாய்மையே வெல்லும் என்கிறோம்
 வாய்மையே கடைப்பிடிக்க தயங்குகிறோம்..